Skip to main content

முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட கேரளா ஊராட்சி தீர்மானம்! தமிழக விவசாயிகள் கண்டனம்!!

Published on 27/09/2022 | Edited on 27/09/2022

 

Kerala panchayat decision to demolish Mullai Periyar dam and build a new dam! Tamil Nadu Farmers Condemn!!

 

தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக கேரளா எல்லையில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. இந்த முல்லைப் பெரியாறு அணை மூலம் தென் மாவட்டத்தில் உள்ள மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கும் விவசாய நிலங்கள் பாசன வசதிக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.

 

அப்படி இருக்கும் போது கேரளாவில் உள்ள சில விஷமிகள் முல்லை பெரியாறு அணை பலமிழந்து விட்டதாகவும் அதனை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் எனவும் வதந்தியை தொடர்ந்து கிளப்பி வருகின்றனர். இதனை வலியுறுத்தி கேரளா அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இடுக்கி மாவட்டம், தொடுபுழா அருகே உள்ள வெள்ளியமட்டம் ஊராட்சியில் முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையை கட்ட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. 

 

இதற்கு தமிழக விவசாயிகள் பெரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து பெரியார் வைகை பாசன விவசாய சங்க  ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியதாவது, “முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என இடுக்கி வெள்ளியமட்டம் ஊராட்சி தலைவர் இந்துபிஜீ முன்னிலையில் கடந்த 23ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அங்குள்ள 15 வார்டுகளில் 8 சுயேச்சைகளும் இரண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், பாஜக மற்றும் கேரளா காங்கிரஸ் தலா ஒரு வார்டுகளையும் கைப்பற்றி உள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு சேவ் கேரளா பிரிகேட் அமைப்பின் தலைவர் வக்கீல் ரசூல் ஜோய் இடுக்கி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இந்த தீர்மானத்தை நிறைவேற்ற கடிதம் அனுப்பி இருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு தமிழக விவசாயிகள் சார்பில் கண்டனத்தை பதிவு செய்துள்ளோம். அதுபோல் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தென்காசி உள்பட மாவட்ட அனைத்து ஊராட்சிகளிலும் தேவிகுளம் பீர்மேடு உடும்பன்சோலை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற கடிதம் அனுப்பி உள்ளோம்” என்று கூறினார்.  

 

 

சார்ந்த செய்திகள்