Skip to main content

பழங்குடியினப் பெண்ணிடம் அத்துமீறல்; மன்னிப்பு கேட்ட கேரள வனத்துறை

Published on 27/10/2022 | Edited on 27/10/2022

 

 Kerala Forest Department Apologizes to Tribal Woman for Trespassing

 

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தலையணைப் பகுதியில் சுமார் 43 மலைவாழ் பழங்குடியினத்தவர்கள் குடும்பமாக வசித்து வருகின்றனர். மலைப் பகுதியில் தேன் எடுத்தல்,குங்கிலியம்,சுண்டைக்காய்,கல்தாமரை மற்றும் சிறு வன மகசூல் போன்றவைகளையும் சேகரிக்கும் தொழிலில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்தச் சூழலில் கடந்த 23 ம் தேதி அன்று தலையணை பகுதியில் வசிக்கும் ஈசன் என்பவரின் மனைவி சரசு, இரண்டு பெண்கள் மற்றும் ராஜா என்பவர் உள்ளிட்ட பழங்குடியினத்தவர் சிலர் தமிழக-கேரள வன எல்லையான செண்பகவல்லியம்மன் அணைப்பக்கம் வன மகசூலைச் சேமித்திருக்கிறார்கள். பின்னர் அதனை தோளில் சுமந்துகொண்டு குடியிருப்புக்குத் திரும்பும் பொருட்டு மலையிலிருந்து கீழே இறங்கியுள்ளனர். அந்நேரம் மலைமேல் சென்றுகொண்டிருந்த கேரள வனத்துறையினர், மலைவாழ் பழங்குடியினப் பெண் ஒருவரை வழிமறித்து இது கேரள வனப்பகுதி இந்தப் பகுதிக்குள் யாரும் வரக்கூடாது சுமையை இறக்கு என்றவர்கள் அத்துமீறி அந்தப் பெண் தோளில் வைத்திருந்த வன மகசூலைப் பிடித்து இழுத்து அவமானப்படுத்தியதில் அந்தப் பெண்ணின் சேலை கிழிந்திருக்கிறது.

 

இதையடுத்து அவர்கள் தலையணை வந்து பின்னர் நடந்தவைகளை வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இதுகுறித்து வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் கேரளா மற்றும் தமிழக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதனையடுத்தே கேரள வனத்துறையைச் சேர்ந்த பெரியார் கோட்ட வனச் சரகர் அகில்பாபு, கடையநல்லூர் வனச்சரகர் சுரேஷ், இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் தலையணைப் பகுதியில் வசிக்கும் பளியர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மக்கள், சமூக ஆர்வலர்களான பாண்டியன், ராமராஜ் ஆகியோர் பங்கேற்ற அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது.

 

 Kerala Forest Department Apologizes to Tribal Woman for Trespassing

 

அப்பொழுது கடந்த 3ம் தேதி அன்று நடைபெற்ற சம்பவத்திற்கு கேரளாவின் பெரியார் கோட்ட வனச்சரகர் அகில் பாபு வருத்தம் தெரிவித்தவர், சம்பவத்தில் தொடர்புடைய வனக்காவலர்களை நவ 2ம் தேதிக்குள் விசாரணை செய்வதாக உறுதியளித்தார். மேலும் அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியிருப்பு வாசிகளை தமிழக வனத்துறை எல்லைக்குள்  சோதனை செய்வதோ மரியாதைக் குறைவாக நடத்துவதோ அப்பகுதி மக்களுக்கு அச்சம் ஏற்படும் எந்த ஒரு செயலிலும் ஈடுபடமாட்டோம் என்றும் தமிழக எல்லையைத் தாண்டி கேரளா எல்லைக்குள் பாதை நோக்கத்திற்காக வருபவர்களை எந்த வகையிலும் தொந்தரவு செய்யமாட்டோம் என்றும் கேரள வனத்துறையினர் எழுதிக் கையெழுத்திட்டு கொடுத்தனர்.

 

பழங்குடியினவாசியான ஜோசப் என்பவர் கூறுகையில், “எங்கள் மக்கள் சென்ற செண்பகவல்லி அணைப்பகுதி தமிழக வனத்துறைப் பகுதியாகும். கேரள வனத்துறையினர் தான் பழங்குடியினப் பெண்ணிடம் அத்துமீறி இருக்கிறார்கள்” என்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்