தமிழக கேரள எல்லையான தேக்கடியில் அமைந்துள்ளது கர்னல் பென்னி குக் கட்டிய முல்லைப் பெரியாறு அணை. தென் தமிழகத்தில் உள்ள தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் நீராதாரமாகத் திகழும் இந்த அணை, தமிழகப் பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த முல்லைப் பெரியாறு அணைப்பகுதிக்குத் தேவையான மின்சாரம் கேரளாவின் வல்லக்கடவு பகுதியில் இருந்து விநியோகம் செய்யப்பட்டுவந்தது. கடந்த, 2000ஆம் ஆண்டு மின் கம்பிகள் உரசியதில் யானை உயிரிழந்ததையடுத்து முல்லைப் பெரியாறு அணைக்கு வழங்கிவந்த மின்சாரத்தை கேரள மின்வாரியம் நிறுத்தியது. இதனால், மதகுப்பகுதி, ஆய்வாளர் மாளிகை, அணைப்பகுதி, குடியிருப்புப் பகுதிகளில் ஜெனரேட்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், அணைப்பகுதிக்கு மின் இணைப்பு வழங்க பெரியாறு புலிகள் சரணாலயம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவந்தது.
இதனை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசு வழக்கு தொடர்ந்து, பாதுகாக்கப்பட வேண்டிய அணைப் பகுதிக்காக நிலத்துக்கு அடியில் கேபிள்கள் பதித்து அவசியம் மின் இணைப்பு வழங்க வேண்டும் எனக் கோரியது. இதனை ஏற்ற கேரள உயர்நீதிமன்றம், முல்லைப் பெரியாறு அணைக்கு மின்சாரம் வழங்க உத்தரவிட்டது. அதனடிப்படையில், வல்லக்கடவு பகுதியில் இருந்து 5.5 கி.மீ தூரத்தில் பூமிக்கு அடியில் மின்சாரக் கம்பிகள் பதிக்கும் பணிகள் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பணிகள் துவக்கப்பட்டது. மேலும், இதற்காக கேரள மின்வாரியத்திற்கு ரூ.1.65 கோடியை தமிழக அரசு செலுத்தியது.
இந்நிலையில், பூமிக்கு அடியில் மின்சாரக் கம்பிகள் பதிக்கும் பணிகள் கடந்த ஜனவரியில் முடிவடைந்ததை அடுத்து இன்று அதற்கான இணைப்பு விழா நடைபெற்றது. இடுக்கி மாவட்டம் வண்டிப் பெரியாரில் நடைபெற்ற விழாவில், கேரள மின்சாரத்துறை அமைச்சர் எம்.எம்.மணி, முல்லைப் பெரியாறு அணைக்கான மின் இணைப்பைத் துவக்கி வைத்தார். இந்தவிழாவில், இடுக்கி எம்.பி. டீன் குரியகோஸ், பீர்மேடு எம்.எல்.ஏ. பிஜூமோள், தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் மற்றும் தமிழக - கேரள பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். 20 ஆண்டுகளுக்குப்பின் அணைக்கு மின் இணைப்பு வழங்கியதால் தென்தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்ததுடன் மட்டுமல்லாமல் தமிழக அரசுக்கும் நன்றி சொல்லி வருகிறார்கள்.