கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ்பாபு எழுதிய யார் கைகளில் இந்து ஆலயங்கள் என்ற நூல் வெளியீட்டு மற்றும் அறிமுகவிழா நடைபெற்றது. அக்கட்சியின் மாவட்ட செயலாளர் டி.ஆறுமுகம் தலைமை தாங்கினார். இதில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு நூலின் முதல் பிரதியை வெளியிட ரமேஷ்பாபுவின் கல்லூரிகால ஆசிரியர் ராமநாதன் பெற்றுக்கொண்டார்.
அதனை தொடர்ந்து பேசிய கே.பாலகிருஷ்ணன், "ரமேஷ்பாபு பல்வேறு பணிச்சுமைகளுக்கிடையே யார் கைகளில் இந்து ஆலயங்கள் என்ற நூலை எழுதியுள்ளார். சரியான நேரத்தில் தான் இந்த நூலை எழுதியுள்ளதாக நான் கருதுகிறேன். ஏனெனில் அறநிலையத்துறையை கலைத்துவிட்டு ஆலயங்களை எங்களிடம் ஒப்படையுங்கள் என மத்திய அரசு ஒருபுறமும், பாஜகவினர் ஆலயங்களை எங்களிடம் ஒப்படையுங்கள் என கூறி உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி மறுபுறமும் நெருக்கடி கொடுத்து வரும் காலகட்டத்தில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது வரவேற்கதக்கது.
நூறு ஆண்டுகள் வரலாறு படைத்த சுமார் 70 ஆயிரம் கோயில்களை எங்களிடம் ஒப்படையுங்கள் என கூறும் மத்திய அரசு அது நிர்வகித்து வரும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க தவறி வருகிறது. திருச்சி பெல் நிறுவனம், எல்ஐசி போன்ற நிறுவனங்களை தனியார் மயமாக்குவதில் குறியாக உள்ளது. கோயில்களை கைப்பற்றி அதில் இந்துத்துவாவையும், சமஸ்கிருதத்தையும் புகுத்த வேண்டும் என முடிவு செய்து ஒரு பண்பாட்டு போராட்டமே நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து மாநில அரசு எந்த முடிவும் தெரிவிக்காமல் மௌனமாக இருப்பது சரியல்ல. இதே சிதம்பரத்தில் நடராஜர் கோவிலில் வைணவ சிலைகளை வைக்கக்கூடாது என எதிர்த்து உண்ணாவிரதம், போராட்டம், தற்கொலை வரை சிதம்பரம் தீட்சிதர்கள் சென்றனர் என்ற வரலாறு உண்டு. அதேபோல் இந்து மதத்தை உருவாக்கியவர்கள் பிரிட்டிஷார் என மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி கூறவில்லை காஞ்சி சங்கராச்சாரியேரே கூறியுள்ளார்" என தெரிவித்தார்.