கிராமத்து மக்களுக்கு ஒட்டுமொத்த சந்தோசம் என்பது ‘நல்லா மழை பெய்து, வெள்ளாமை வெளயனும்’ என ஒவ்வொரு கிராமத் திருவிழாவிலும் காவல் தெய்வங்களை வேண்டிக்கொள்வார்கள். கருப்பர், அய்யனார் கோயில்கள் என ஊர் காக்கும் சாமி கோயில்களிலும் பொங்கலிட்டு கிடா வெட்டுவது என திருவிழாவையே தெறிக்கவிடுவார்கள்.
அப்படித்தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் 18 பட்டிக்கு, கிட்டத்தட்ட 15 ஆயிரம் ஹெக்டருக்குப் பாசனம் தரும் மாவட்டத்தின் மிகப்பெரிய பாசன ஏரியான திருவப்பூர் கவிநாட்டு கண்மாய் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு முழு கொள்ளளவை எட்டி மதகுகள் நேற்று முன்தினம் (18.11.2021) திறக்கப்பட்டது. இந்த மதகுகள் திறக்கப்பட்ட உடனே ஊர் மக்களுக்குப் பெரும் சந்தோசம்.
இந்த திருவப்பூர் கவிநாட்டு கண்மாய் முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் என அத்தனை வி.ஐ.பி.களும் ஒவ்வொரு நாளாக கண்மாயை பார்த்துச் சென்ற வண்ணம் இருக்கின்றனர்.
மொத்தத்தில் திருவப்பூர் கண்மாய், சுற்றுலாத்தலம் போல் விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது. இதனைக் கொண்டாடும் வகையிலும், இயற்கைக்கு நன்றி செலுத்தும் வகையிலும் நேற்று கவிநாடு கண்மாயில் சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு வழிபாடுகளை நடத்தி, கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சீரியல் லைட் போட்டு கிட்டத்தட்ட கிராம மக்கள் ஒரு திருவிழாவையே நடத்திவிட்டார்கள்.