நாமக்கல் அருகே, குடிபோதையில் பணிக்கு வந்த அரசுப்பள்ளி ஆசிரியரை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் வரகூராம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்முத்துகுமார் (45). ராசிபுரம் அண்ணா சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்த 2014ம் ஆண்டு முதல் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் (ஆக. 26) பள்ளிக்கு மது அருந்திவிட்டு போதையில் சென்றுள்ளார். அங்கு தலைமை ஆசிரியர் மாதேஸ்வரனிடம் ஆபாசமாக பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து மாதேஸ்வரன் அளித்த புகாரின்பேரில் ராசிபுரம் காவல்துறையினர் செந்தில்முத்துகுமார் மீது வழக்குப்பதிவு செய்து, பிணையில் விடுவித்தனர். மேலும் துறை ரீதியான நடவடிக்கைக்கும் பரிந்துரை செய்யப்பட்டார். இதுபற்றி விசாரித்த நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, பள்ளியில் பணி நேரத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக, அவரை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.