கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம் காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் கலைமணி (52). இவர் கரூர் அடுத்த தாளியாபட்டி அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 11.04.2022 அன்று வங்கி அதிகாரி என்ற பெயரில், மர்ம நபர் ஒருவர் இவருக்கு போன் செய்துள்ளார். சந்தேகம் அடைந்த ஆசிரியர் கலைமணி இணைப்பை துண்டித்து விட்டு, வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.
அப்போது ஆசிரியரின் செல்போன் எண்ணுக்கு வந்த வங்கி தொடர்பான போலியான லிங்கை அவரது மகள் கிளிக் செய்து ஆசிரியரின் வங்கி பதிவு செல்போன் எண்ணுக்கு வந்த OTP எண்ணை பதிவிட்டுள்ளார். 5 நாட்களுக்கு பிறகு தனது வங்கி கணக்கில் பணம் எடுப்பதற்காக ஏடிஎம் சென்று ஆசிரியர் கலைமணி பார்த்தபோது, ரூ. 2 லட்சத்து 99 ஆயிரத்து 900 எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மற்றொரு வங்கிக் கணக்கில் ரூ. 25 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 3.24 லட்சம் மோசடியாக கையாடல் செய்யப்பட்டது அவருக்கு தெரிய வந்துள்ளது.
அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் கலைமணி கரூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து கரூர் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.