கரூரில் முயல், அணில், காடை, போன்ற விலங்குகளை வேட்டையாடி குவியலாக வைத்து பின் சமைத்துச் சாப்பிடுவது போன்று புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டது, சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது வனத்துறை மற்றும் காவல்துறையினருக்குப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து ஃபேஸ்புக்கில் அந்தப் படங்களை யார் பதிவேற்றம் செய்தது? என்பது குறித்தும், இந்தக் கும்பல் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்தும் கரூர் மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜன், மற்றும் சைபர் க்ரைம் போலீஸார் விசாரிக்கத் துவங்கினர். விசாரணையில் கரூர் மாவட்டம் மண்மங்கலம், அருகே ஆத்தூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் அவரது நண்பர்கள் என்பது உறுதியானது.
இதையடுத்து வனத்துறையினர் அங்குச் சென்று சந்தோஷைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் சந்தோஷூம், அவர் நண்பர்களும் வேட்டை நாய் மூலம், காட்டுப்பகுதியில் அணில், முயல், காடை, போன்ற விலங்குகளை வேட்டையாடி, அவற்றை அங்கு உள்ள விடுதியில் வைத்து சமைத்து சந்தோஷமாக ஆடிபாடி உள்ளனர். இதை அவர்கள் செல்போனில் படம் பிடித்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்து வெளியிட்டோம் என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள்.
அதனைத் தொடர்ந்து சந்தோஷ், மணிகண்டன், தீனதயாளன், அஜித், வீரக்குமார். மார்டின், சித்தார்த், உள்ளி்ட்ட எழு பேரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வனவிலங்குகளை வேட்டையாடுவது குற்றம், அவ்வாறு வேட்டையாடுபவர்களுக்கு 25,000 ரூபாய் அபராதம், 3 ஆண்டு முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.