வேளாண்துறையில் கலப்பட ரக நெல் கொடுத்து ஏமாற்றப்பட்டதாக நெல்மணிகளுடன் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த மேலசுக்காம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்ற விவசாயி நங்கவரம் வேளாண்துறை விதை நெல் அலுவலகத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக "பொன்மணி" என்ற ரக விதை நெல் வாங்கி வந்து தனக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தில் பயிரிட்டுள்ளார். ஆனால், நெற்பயிர் சரியாக முளைக்காமல் மூன்று ரக நெல் பயிர்களாக காணப்படுவதால், கலப்பட நெல் கொடுக்கப்பட்டு தான் ஏமாற்றப்பட்டதாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 18 ஆம் தேதி புகார் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஏற்கனவே சம்பந்தப்பட்ட வேளாண் துறை அதிகாரிகளிடம் புகார் செய்து 15 நாட்களுக்குள் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தும், வேளாண் துறை சார்பில் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படாத காரணத்தால், மாவட்ட ஆட்சியரிடம் முறையிட வந்ததாகவும், ஏக்கருக்கு 40,000 ரூபாய் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் வருத்தம் தெரிவித்தார். இதே போல இன்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நெற்கதிருடன் வருகை தந்த விவசாயி சீனிவாசன் திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் "தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவீர்கள்" என்று எச்சரிக்கை விடுத்தனர். இதன் காரணமாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட சென்றார்.