கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் செந்தில் பாலாஜி ஆவார். இவர் தன்னுடைய பள்ளி, கல்லூரி நாட்களிலே அரசியலில் ஈடுபட்டு கட்சியில் மாணவர் அணி செயலாளர், மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ, அமைச்சர் என்று அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்றார். அதிமுக- திமுக என தமிழகத்தில் இரண்டு பெரிய கட்சிகளிலும் தன்னுடைய நிலையை நிறுத்திக் கொண்ட செந்தில்பாலாஜி தன்னுடைய வளர்ச்சிக்கு காரணமான கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி 23 ஆண்டுகள் கழித்து தான் படித்த கல்லூரிக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கரூர் அரசு கலைக் கல்லூரியில் 1993- 96 ஆம் ஆண்டுகளில் பயின்ற முன்னாள் கல்லூரி மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரியில் நடைபெற்றது. இதில் கல்லூரியின் முன்னாள் மாணவரும், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி பங்கேற்றார். சிறப்பு அழைப்பாளராக கரூர் மக்களவைத்தொகுதி உறுப்பினர் செ.ஜோதிமணி பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர்கள் தங்களது கல்லூரி படிப்பு காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை நினைவு கூர்ந்தனர். இந்த கல்லூரியின் முன்னாள் மாணவரான வி.செந்தில்பாலாஜி தனது கல்லூரி கால நண்பர்களுடன் கலந்துரையாடினார்.
இந்த நிகழ்ச்சியில், அப்போதைய பேராசிரியர்களான நடேசன், பழனிசாமி, பாலகிருஷ்ணன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். அதை தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். பிறகு முன்னாள் மாணவர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.