இலங்கையில் நடைபெற்றது திட்டமிடப்பட்ட இனப்படுகொலை என்பதை ஐ.நா. பொதுசபை அறிவிக்க வேண்டும். சர்வதேச விசாரணையும் பொதுவாக்கெடுப்புமே தமிழ் மக்களுக்கான ஒரேதீர்வு. பன்னாட்டு விசாரணையும் பொதுவாக்கெடுப்பும் நடத்துவதற்கான தீர்மானத்தை கொண்டு வரவேண்டும். அதை காலம் கடத்தாது நிறைவேற்ற வேண்டும் என்று திருவாடானை எம்.எல்.ஏ.வும், நடிகருமான கருணாஸ் ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. பொதுசபையில் வலியுறுத்தினார்.
ஜெனிவாவில் நடைபெற்ற 40வது ஐ.நா. கூட்ட தொடரில் கருணாஸ் கலந்து கொண்டார்.
அப்போது அவர்,
கடந்த 2009ஆம் ஆண்டில் உலகமே நினைத்து பார்க்காத வகையில் இலங்கையில் தமிழர்கள் மீது இனப்படுகொலை நடந்தேறியது. இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டிய சர்வதேச சமூகம், தங்களது கடமையில் இருந்து தவறியுள்ளதை யாரும் மறுக்க முடியாது.
நான் வாழும் தமிழகத்தில் இலங்கை தமிழர்களின் நீதிக்காக தொடர்ந்து உணர்வுமிக்கப் போராட்டங்களை நடத்துகிறோம்! புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களும் தொடர்ந்து போராடுகிறார்கள்! எங்களது உணர்வுகளுக்கு சர்வதேச சமூகம் செவிசாய்க்க வேண்டும்.
மறைந்த ஜெயலலிதா இலங்கை அரசுக்கு எதிராக 24.10.2013 - 12.11.2013 ஆகிய தேதிகளில் அவசர சட்டசபை கூட்டி காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டுமென்றும், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டுமென்றும் இந்திய அரசிற்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியது. தொடர்ந்து நாங்கள் சட்டப் பேரவைக்குள்ளும், வெளியிலும் போராடுகிறோம்! ஆனால் இந்திய அரசு எங்கள் உணர்வை மதித்ததே இல்லை என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இனப்படுகொலை நடந்தேறி 10 ஆண்டுகள் கடந்து விட்டன. இலங்கை சிங்கள அரசு நடத்தியது இனப்படுகொலைதான் என்பதற்கு பல வகைகளில், அடுக்கடுக்கான ஆதாரங்கள், நேரடி விசாரணைகள் – சாட்சிகள் என அனைத்தும் அடுக்கி வைத்தப்பிறகும் நீதிக்கான விசாரணக்கு காலம் கடத்தும் காரணமென்ன?
கடந்த காலங்களில் ஐ.நா.வின் மூவர் குழு அறிக்கை சாட்சியங்களோடு இலங்கையில் நடந்த இனப்படுகொலையை நிரூபித்தது. ஆனால் எங்கள் குருதி காய்வதற்குள் ஐ.நா.மனித உரிமைக் கவுன்சில், இராஜபக்சே அரசுக்கு பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றி தமிழர்களின் நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சியது.
2015 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெற்ற மனித உரிமைக் கவுன்சிலின் 30 ஆவது அமர்வில், ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் மனித உரிமைகள் குறித்தும், போர்க் குற்றங்கள் குறித்தும் பன்னாட்டு நீதிபதிகளும் பங்கேற்கும் விதத்தில் விசாரணை நடைபெற வேண்டும் என்றும், நல்லிணக்கத்தை வளர்க்க வேண்டும் என்றும் அந்த 30 ஆம் எண் தீர்மானம் கூறியது. ஆனால் இரண்டு நாள் கழித்து இலங்கையில் எந்த வெளிநாட்டு நீதிபதியையும் அனுமதிக்க மாட்டோம் என்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா ஆணவத்தோடு அறிவித்தார். பன்னாட்டுச் சமூகம் இதற்கு பதிலுரைத்தது என்ன?!
தொடர்ந்து ஈழத்தில் அமைதி நிலவுகிறதா? காணாமல் போனோரை மீட்டுத்தர சொல்லி தமிழ்ப் பெண்கள் வீதியில் போராடுகின்றனர். ஆனால் இன்னும் இராணுவம் வெளியேறவில்லை. மாறாக சிங்களக் குடியேற்ற நடக்கிறது.
12 மாதத்தில் மனித உரிமை ஆணையர் இலங்கை குறித்து சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கையை மேலும் 6 மாதம் தள்ளிப் போட்டது.
18 மாதங்களுக்குப் பின்னர் ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைக் கவுன்சிலின் 34ஆவது அமர்வில் 2017 மார்ச் 23 ஆம் தேதி ஈழத் தமிழருக்கான நீதியை ஆழக் குழிதோண்டிப் புதைத்து இனக்கொலை செய்த சிங்கள அரசுக்கு ஆதரவாக தீர்மானம் எண் 34 நிறைவேற்றப் பட்டுள்ளது. 36 நாடுகள் அத்தீர்மானத்துக்கு உடன்பட்டு முன்மொழிந்ததால், தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடாமலே நிறைவேற்றப்பட்டது. கொலை செய்தவர்களையே நீதிபதியாக்கி நீதியை அழித்த இழிவான செயல் நடந்தேறியதை மறக்க இயலாது.
ஐ.நா-வின் உள்ளக விசாரணை நீர்த்துப் போகச் செய்வதற்கான வேலைகளை பெரும் வலைப்பின்னல் அமைத்து தொடர்ந்து தடுத்து வருகிறது இலங்கை அரசு. இலங்கையில் இலட்சக்கணக்கான தமிழர்களை இனப்படுகொலை செய்து கொன்றொழித்த சிங்கள அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முற்படாமல், அவ்வரசுக்கு மீண்டுமொருமுறை வாய்ப்பு வழங்க ஐ.நா. மனித உரிமையில் மன்றம் நினைப்பது ஏன்?
கடந்த 2015ஆம் ஆண்டு வட அமெரிக்காவின் முன்முயற்சியால் கொண்டுவரப் பட்ட தீர்மானத்தின்படி, சிங்கள அரசு தன்னைத் தானே விசாரித்துக் கொள்ளும் பன்னாட்டு நீதிபதிகள் பங்கேற்புடனான கலப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டுமெனக் கோரியது. 2017ஆம் ஆண்டு வரை அது அமைக்கப்படவில்லை! எனவே, இரண்டாண்டு கால அவகாசம் வழங்கப்பட்டது! இப்போதும் அது அமைக்கப்படவில்லை!
இப்போது, மீண்டும் இரண்டாண்டுகள் இலங்கைக்கு கால அவகாசம் ஏன் வழங்க வேண்டும்.
இந்திய அரசின் துணையோடு நடைபெற்று வரும் இந்தக் கால நீட்டிப்புகள், இலங்கையில் நடைபெற்று வரும் கட்டமைப்பு இன அழிப்புக்கு துணை செய்யும் நடவடிக்கையாகும்!
ஐ.நா.தீர்மானத்தில் கூறப்பட்ட ஏனைய விசயங்களில் பெயரளவுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பெரும் முன்னேற்றங்களாக காண்பிப்பதும் ஐ.நா. மனித உரிமை மன்றம் வழங்கிய உறுதிப்பாட்டை நிறைவேற்றாமல் காலத்தை இழுத்தடிப்பதும் இலங்கை அரசின் நேர்மையற்ற பண்பையும் கபடத்தனத்தையும் வெளிப்படுத்துகிறது.
அதனடிப்படையில்தான் இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைத்தல் அல்லது சர்வதேச சிறப்பு குற்றவியல் தீர்ப்பாயத்தை நிறுவுதலே பெருமளவில் பாதிக்கப்பட்டவர்களான தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கான வழிமுறையாகும் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்!
1. இலங்கைக்கு மீண்டும் கால நீட்டிப்பு வழங்கப்படக் கூடாது.
2. இலங்கை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு, அல்லது போர்க்குற்றப் புலன் விசாரணைக்கென்று இலங்கைக்காக அமைக்கப்படும் சிறப்புப் பன்னாட்டுக் குற்றத் தீர்ப்பாயத்தின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
3. போரினால் பாதிக்கப்பட்டோரின் துயரம் குறித்தும், ஏனைய சர்வதேச மனிதஉரிமை, மனிதநேயச் சிக்கல்கள் குறித்தும் கண்காணித்து ஆறு மாதத்துக்கொரு முறை அறிக்கையளிக்கும் பொறுப்பில் இலங்கைக்காக்கான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் ஒருவர் அமர்த்தப்பட வேண்டும்.
4. இன அழிப்புச் சான்றுகளை அழியவிடாமல் காக்க ஒரு நடுநிலையான பன்னாட்டுப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும்!
இதுவே எங்களது பிரதான கோரிக்கையாகும்.
வல்லரசுகளின் பூகோள அரசியல் வலைப்பின்னலுக்கு ஒரு இனம் பலியாக்கப்பட்ட அரசியலை மனிதம் காக்க நினைப்போர் மறக்கமாட்டார்கள் ஐநா பொதுசபை நீதிக்காக நிமிர வேண்டும் அது! தமிழருக்கான நீதியை ஐ.நா. உயர்த்திப் பிடிக்கும் என்று நம்புகிறோம்!
இலங்கையில் நடைபெற்றது வெறும்போர்குற்றமோ மனித உரிமை மீறலோ மட்டு மல்லாது அதுதிட்டமிடப்பட்ட இனப்படுகொலை என்பதை ஐ.நா. பொதுசபை அறிவிக்க வேண்டும். சர்வதேச விசாரணையும் பொதுவாக்கெடுப்புமே தமிழ் மக்களுக்கான ஒரேதீர்வு. பன்னாட்டு விசாரணையும் பொதுவாக்கெடுப்பும் நடத்துவதற்கான தீர்மானத்தை கொண்டு வரவேண்டும். அதை காலம் கடத்தாது நிறைவேற்ற வேண்டும்.
நீதிக்கான மனித நேயக்குரலை இந்த ஐ.நா. அறமன்றம் ஓங்கி உயர்த்தி இவ்வுலகுக்கு உரைக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்!