அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் நேற்று (01-12-23) திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் 15 மணி நேர விசாரணையும், அவர் பணிபுரிந்து வந்த மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் 13 மணி நேர சோதனையும் நிறைவடைந்து இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் இன்று (02-12-23) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “இந்த விவகாரம் எந்த வகையிலும் எனக்கு வியப்பு அளிக்கவில்லை. என்னை பொறுத்தவரை ஊழல் அதிகாரிகளால் இருக்கும் இயக்கம் தான் இந்த அமலாக்கத்துறை. பல பேர் பெரும் பணம் கொடுத்து தான் இந்த துறையிலே சேர்வார்கள். அவர்கள் லஞ்சம் கொடுத்து தான் இந்த துறையிலே சேருகிறார்கள். அதனால், லஞ்சம் பெற்று தான் அவர்களுடைய முதலீட்டை திருப்புவதற்காக இந்த செயலில் ஈடுபடுகிறார்கள்.
அமலாக்கத்துறையினர், சம்பந்தமே இல்லாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியோ அல்லது சம்மன் அனுப்பியோ அவர்களை எல்லாம் மன உளைச்சலை உண்டாக்குகிறார்கள். அதனால், பல தொழிலதிபர்கள் வேறு வழியின்றி லஞ்சத்தை கொடுக்கிறார்கள். எனவே, இது அவர்களுடைய வாடிக்கையான நடவடிக்கை தான். அங்கித் திவாரி போல் அங்கு நூற்றுக்கணக்கான அதிகாரிகள் இருக்கிறார்கள். அதனால், இந்த அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும்” என்று கூறினார்.