கர்நாடக நீர்ப்பாசன அமைச்சர் எம்.பி.பாட்டீலுக்கு கண்டனம் - பி.ஆர்.பாண்டியன்
கர்நாடக நீர் பாசன அமைச்சர் எம்.பி. பாட்டீலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் முன்வர வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழ்நாடு காவிரி நீரின்றி பாலைவனமாக காட்சியளிக்கிறது. நிலத்தடி நீர் பறிபோய்விட்டது. சென்னை உட்பட 25 மாவட்டங்கள் குடிநீரின்றி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு செயலற்று உள்ளது. இந்நிலையில் காவிரி நதிநீர் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இறுதிகட்ட விசாரனை முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், நடுவர்மன்ற இறுதி தீர்ப்பின்படி உடன் 4 வார காலத்திற்க்குள் காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக்குழு அமைத்து சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தண்ணீர் பகிர்ந்துகொள்ள வேண்டிய நடவடிக்கைகளை மேற்க்கொள்ள மத்திய அரசுக்கு நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதனை மத்திய அரசு வழக்கறிஞர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
எனவே தற்போதைய நிலையில் தமிழகத்தில் 5 கோடி மக்கள், 25 லட்சம் ஏக்கர் விளைநிலங்களை பாதுகாத்திட மத்திய அரசு விரைந்து செயல்பட்டு தமிழகத்திற்கு உரிய நீரை பெற்றுக்கொடுத்து பாதுகாத்திட வேண்டும். மறுக்கும் பட்சத்தில் தமிழகத்தின் அழிவிற்கு மத்திய பாஜ.க அரசே பொறுப்பேற்க வேண்டும்.
இந்நிலையில் உச்சநீதிமன்ற நடவடிக்கையை பொறுத்துக்கொள்ள முடியாத கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றத்திற்க்கு அதிகாரம் இல்லை என்றும் அதனை ஏற்கமாட்டோம் என்று நீதிமன்றத்தை மிரட்டும் வகையில் அறிவித்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். இவரது பேச்சுக்கு அரசியல் லாபம் கருதி மத்திய அரசு துணைபோகிறதோ என்ற சந்தேகம் உள்ளது.
அரசியல் அமைப்பு சட்டப்படி ரகசிய காப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்ட ஒரு அமைச்சரே வழக்கு விசாரணையில் குறுக்கிடுவதும், பேசுவதும், மிரட்டுவதும் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். இதனை அனுமதித்தால் இந்தியாவின் ஒற்றுமையை சீர்குழைவதோடு, சட்டமும், நீதியும் கேள்விக்குறியாகி விடும். இதனை நீதிமன்றம் அனுமதிக்கக்கூடாது; உடன் அமைச்சர் பாட்டீல் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை துவங்கிட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.