கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சீக்கணப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் காரில் தர்மஸ்சாலா கோயிலுக்கு சென்றனர். பின்பு தரிசனம் செய்து விட்டு ஊர் திரும்பும் போது தும்கூர் அருகே குனிகல் பகுதியில் கார் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தமிழக பக்தர்கள் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தமிழக பக்தர்களின் காரையடுத்து பின்னால் வந்த காரும் விபத்தில் சிக்கியதில் பெங்களூரை சேர்ந்த 3 பேரும் பலியாகினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் கர்நாடகாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் இறந்த 10 தமிழர்களின் குடும்பத்துக்கு தலா ரூபாய் 1 லட்சம் நிதியுதவி வழங்கவும், காயமடைந்த மூன்று பேரின் குடும்பத்துக்கு தலா ரூபா 50,000 நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டதோடு, உயிரிழந்த தமிழ் பக்தர்களின் குடும்பத்துக்கு முதல்வர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.