தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மார்க்கண்டேய நதியில் தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் கர்நாடக அரசு அணை கட்டியிருப்பது தமிழ்நாட்டு விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
430 மீட்டர் நீளத்திலும், 50 மீட்டர் உயரத்திலும் அமைக்கப்பட்டுள்ள இந்த அணையில் 165 டிஎம்சிவரை தண்ணீரை சேகரித்து வைக்க முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்பெண்ணை ஆற்றின் மூலமாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்கள் நீர் பாசன வசதி பெற்றுவருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் கர்நாடக அரசு அணை கட்டியிருப்பது தமிழ்நாட்டு விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக தற்போது தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "கடந்த கடந்த 2.7.2021 அன்று சில நாளேடுகளில் மார்க்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மார்க்கண்டேய நதி கர்நாடகத்தில் உற்பத்தியாகி தமிழ்நாட்டில் தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் ஒரு சிறு கிளை நதியாகும். 2017இல் மத்திய நீர்வள குழுமத்தின் பொறியாளர்கள் ஆய்வுசெய்தபோது கர்நாடக அரசு அப்பகுதியில் குடிநீர் தேவைக்காகவும், நிலத்தடி நீர் செறிவை அதிகப்படுத்துவதற்காக சுமார் 0.5 டிஎம்சி கொள்ளளவு உள்ள ஒரு சிறிய அணையைக் கட்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு அந்த அணை கட்டி முடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கர்நாடகாவின் இந்தச் செயலை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்துவந்தது. கடந்த காலங்களில் தமிழ்நாடு அரசு எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தது. உச்ச நீதிமன்றத்தில் 2018இல் ஒரு அசல் வழக்கும், ஒரு இடைக்கால மனுவும் தாக்கல் செய்யப்பட்டு, அதன்மீது 2019ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பில், இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண 'நடுவர் மன்றம்' ஒன்றை அமைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நடுவர் மன்றத்தை அமைக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்திவந்த நிலையில், 29.6.2021 அன்று தமிழ்நாடு அரசு மத்திய ஜல்சக்தி அமைச்சகத்துக்கு அனுப்பிய கடிதத்தில் நடுவர் மன்றத்தை விரைவில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இந்த அணையினால் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி தாலுகாவில் மார்க்கண்டேய நதி குறுக்கே குடிநீர் பாசன வசதிபெறும் சுமார் 870 ஹெக்டேர் நிலம் பாதிக்கப்படும். எனவே தொடர்ந்து நடுவர் மன்றம் அமைக்க ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்" என குறிப்பிட்டுள்ளார்.