புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் இயங்கி வரும் மார்க் தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதி செய்வதால் நிலக்கரித் துகள்கள் காற்றில் பரவி அதை மக்கள் சுவாசிப்பதால் மூச்சுத்திணறல், புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு ஏராளமானவர்கள் உயிரிழந்து உள்ளனர் என்று பொதுநல அமைப்புகள் குற்றம் சாட்டி வந்தன.
இந்நிலையில், புதுச்சேரி அரசு மார்க் துறைமுகத்திற்கு நிலக்கரி இறக்குமதி செய்ய அனுமதியை நீட்டிப்பு செய்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கையையடுத்து, மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்வதைத் தடை செய்ய புதுச்சேரி அரசை வலியுறுத்தி போராட்ட இயக்கம் முன்னெடுப்பது குறித்து கலந்தாய்வுக் கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது.
மக்கள் உரிமை கூட்டமைப்பு தலைவர் கோ.சுகுமாறன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு பொதுநல அமைப்புகள், சமூக இயக்கத்தினர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வரும் 15.05.2018 அன்று புதுச்சேரி யில் முற்றுகை போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.