கடந்த ஜனவரி 8-ம் தேதி களியக்காவிளை சோதனை சாவடியில் இருந்த எஸ்.ஐ வில்சனை அப்துல்சமீம், தவ்பீக் இருவரும் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனா். நாடு முமுவதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் கொலையாளிகளை கா்நாடக உடுப்பியில் வைத்து ஜனவரி 14- ம் தேதி போலீசார் கைது செய்தனர்.
அதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுடன் அப்துல்சமீம், தவ்பீக் ஆகிய இருவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் வில்சன் கொலை தொடர்பாக பல முக்கிய தகவல் கிடைத்தது.
இந்நிலையில் போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில் அப்துல்சமீம், தவ்பீக் ஆகிய இருவரையும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதையடுத்து இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் எஸ்.எஸ்.ஐ.வில்சன் கொலை வழக்கு விசாரணை என்ஐஏவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை தனிப்படை போலீசார் விசாரித்து வந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே நேற்று (01/02/2020) கொலையாளி அப்துல் சமீமுக்கு பண உதவி செய்ததாக ஷேக் தாவூத்தை போலீசார் கைது செய்தனர்.