கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமார் (70) காலமானார்.
கரோனா பாதிப்புக்குள்ளான எச்.வசந்தகுமார் ஆகஸ்ட் 10- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
எச்.வசந்தகுமார் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், எச். வசந்தகுமார் மறைவுக்கு இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நடுத்தரக் குடும்பங்களின் வலியறிந்து, வியாபாரத்தை வளர்த்தவர். தன்னுடைய வளர்ச்சியோடு தன்னை சுற்றியிருந்தோரையும் முன்னேற்றியவர். அரசியலிலும் கறை படியாது வாழ்ந்து, மறைந்த வசந்தகுமார் அவர்களின் மறைவு தமிழகத்திற்கே இழப்பு" என்று குறிப்பிட்டுள்ளார்.