கரோனா தொற்று பரவலால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அரசின் தீவிர நடவடிக்கையால் கரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்த நிலையில் இன்று (1-ம் தேதி) பள்ளிகளில் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன.
இதில் குமரி மாவட்டத்தில் 483 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ. பாடப்பிரிவு பள்ளிகள் திறக்கப்பட்டன. அதுபோல் கோணம் அரசு கலைக்கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் கலைக்கல்லூரிகள், தனியார் பொறியியல் கல்லூரிகளும் திறக்கப்பட்டன.
பள்ளி மற்றும் கல்லூரிக்கு வந்த மாணவ மாணவிகளை வீடுகளிலிருந்து பெற்றோர்கள் வாழ்த்தி வழியனுப்பினார்கள். அதன் பிறகு உற்சாகமாகப் பள்ளி மற்றும் கல்லூரிக்குள் முகக் கவசம் அணிந்தபடி நுழைந்த மாணவ மாணவிகளை வாசலில் நின்ற ஆசிரியர்கள் பூக்கள் மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர். கல்வி நிலையத்துக்குள் நுழைந்த மாணவ மாணவிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் கொண்டு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, கைகளைச் சுத்தப்படுத்த சானிடைசர் வழங்கப்பட்டது. மேலும் கல்லூரி மாணவ மாணவிகளிடம் கரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டதற்கான சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது.
மேலும் வகுப்புகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றும் விதமாக ஒரு பெஞ்சில் இரண்டு பேர் மட்டும் உட்கார வைத்தனர். அதோடு மாணவர்களே தாங்களாகக் கொண்டு வந்த சானிடைசர் மூலம் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டனர். அதே போல் பள்ளிக்குள்ளேயும் வெளியேயும் கூட்டமாக இருக்காமல் மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது உறுதிசெய்யப்பட்டது.
இந்த நிலையில் குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கோட்டார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை ஆய்வு செய்து ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.