முன்னாள் முதல்வரும், தி.மு.க.வின் முன்னாள் தலைவருமான கலைஞரின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கலைஞரின் நினைவு நாளைப் போற்றும் வகையில் தமிழகம் முழுவதும் திமுகவினர் அவருக்கு மரியாதை செலுத்தினர். இந்நிலையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் கலைஞரின் காணொளியைப் பகிர்ந்துள்ளார்.
கனிமொழி எம்.பி. தனது ட்விட்டர் பக்கத்தில், “தலைவர் கலைஞரின் சிந்தனைகள் காலங்களைக் கடந்து நம்மை வழிநடத்தக் கூடியவை. எக்காலத்திற்கும் பொருத்தமான அவரது கருத்துகள், இன்றைய அரசியல் சூழலிலும் கூர்மையும் பொருள் பொதிந்தும் உள்ளன. அவரை நான் எடுத்த நேர்காணலின் ஒரு சிறு பகுதி” என்று குறிப்பிட்டு அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
ஜூன் 2006 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அந்த வீடியோவின் துவக்கத்தில், “அப்பா உடனான பல ஆவணப்படுத்தப்பட்ட உரையாடலில், எனக்கு மிகவும் நெருக்கமான தொகுப்பின் ஒரு சிறு பகுதி இது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவில், வேற்றுமையில் ஒற்றுமை குறித்து கலைஞர் பேசியுள்ளார். அவர் பேசியதாவது; “இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் அனைத்து வேற்றுமைகளும் ஒற்றுமை ஆக்கப்பட்டு அந்த வேற்றுமையில் விளைகிற ஒற்றுமை தான் நாட்டுக்கு பலமாக இருக்க முடியும். இந்தியாவில் இருக்கக்கூடிய ஒவ்வொரு மாநில படைகளையும் எப்படி ஒன்று திரட்டி வலுவான படையாக அமைக்க முடியுமோ அதே போல் பல மொழிகளையுடைய சேர்க்கை எல்லாம் ஒன்றுபட்டு அந்த ஒற்றுமையை நம்மால் பலமாக ஆக்கமுடியும். அதனால் வேற்றுமையில் ஒற்றுமை அதுதான் பலமாகும். வேற்றுமையில் கூட யாரும் இருக்கக்கூடாது என்று விலக்கிவிட்டோம் என்றால் இருக்கின்ற ஒற்றுமைக்கும் பலம் குன்றிவிடும். அதைத்தான் வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என்று பண்டிதர் நேரு அடிக்கடி சொல்லி இருக்கிறார்” என்று கலைஞர் தெரிவித்திருக்கிறார்.
வரும் 2024ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒரு கூட்டணி அமைத்துள்ளன. மேலும், அந்தக் கூட்டணிக்கு இ.ந்.தி.யா. என பெயரிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணி குறித்தும், கூட்டணியின் பெயரைக் குறித்தும் பாஜகவினர் விமர்சித்துவருகின்றனர். குறிப்பாக கூட்டணியில் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட பல கட்சிகள் மாநில அளவில் காங்கிரஸுடன் முரண்பட்ட கட்சிகள். அதனால் விரைவில் பல கட்சிகள் கூட்டணியைவிட்டு வெளியேறும் எனத் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், “வேற்றுமையில் விளைகிற ஒற்றுமை தான் நாட்டுக்கு பலமாக இருக்க முடியும்” என்று கலைஞரின் பழைய காணொளியை கனிமொழி எம்.பி. பகிர்ந்திருக்கிறார்.
தலைவர் கலைஞரின் சிந்தனைகள் காலங்களைக் கடந்து நம்மை வழிநடத்தக் கூடியவை. எக்காலத்திற்கும் பொருத்தமான அவரது கருத்துகள், இன்றைய அரசியல் சூழலிலும் கூர்மையும் பொருள் பொதிந்தும் உள்ளன. அவரை நான் எடுத்த நேர்காணலின் ஒரு சிறு பகுதி.#கலைஞர்100 pic.twitter.com/79tRMdgmZN— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 7, 2023