'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' எனும் தலைப்பில் தி.மு.க.வினரின் தேர்தல் பிரச்சாரம் நடந்துவருகிறது. தூத்துக்குடி எம்.பி.யான கனிமொழி கடந்த மூன்று நாட்களாகத் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களின் கிராமம் தோறும் சென்று பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். கிராமசபைகள் கூட்டம், விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர், காஸ் விலையேற்றக் கண்டனக் கூட்டங்கள் எனப் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் கனிமொழி எம்.பி., தென் மாவட்டங்களில் சூறாவளியாய்ச் சுற்றிவருகிறார்.
சேரன்மகாதேவியை அடுத்த கரிசல்பட்டி கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்தவர், தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்கிறார் ஆணித்தரமாக. படித்த இளைஞர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு மற்றும் கல்விக் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மக்கள் அவரிடம் கோரிக்கை வைக்கின்றனர். கரிசல்பட்டி விவசாயிகளோ எலுமிச்சையாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று சொல்ல விவசாய மக்களின் கனவு தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேறும் என்றார்.
காருகுறிச்சியிலோ உலகப் புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர் அருணாச்சலத்திற்கு மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தப்பட்டது. அதன்பின் வள்ளியூர், பரப்பாடி, விஜயநாராயணம் போன்ற பகுதிகளில் மக்களிடம் கலந்துரையாடிய கனிமொழி தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். வள்ளியூர் அருகிலுள்ள சமூகரெங்கபுரத்தின் கல்லூரி மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடிய கனிமொழி, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். பிறகு, மாணவ மாணவியரின் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் என்று உறுதி கூறினார்.
கனிமொழியுடன் நெல்லை கிழக்கு மா.செ.ஆவுடையப்பன், ஞானதிரவியம் எம்.பி., எக்ஸ் எம்.எல்.ஏ. அப்பாவு உள்ளிட்டோர் உடன் சென்றனர்.