''பள்ளிக் கல்விக்கு காமராஜர் என்றால் கல்லூரி கல்விக்கு கலைஞர்'' என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் தனியார் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான கட்டிடம் ஒன்றை திறந்து வைத்து பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ''இன்று தேசிய உயர்கல்வி மாணவர் சேர்க்கையானது 27.1 விழுக்காட்டை விட அதிகமாக 51.4 விழுக்காடு மாணவர்கள் தமிழ்நாட்டில் உயர்கல்வி பெற்றிருக்கிறார்கள் என்றால் அந்த பெருமை கலைஞரையே சேரும். பொறியியல் மற்றும் மருத்துவ கல்விக்கான நுழைவு தேர்வை ரத்து செய்தது மட்டுமல்லாமல் அதற்காக உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலையும் பெற்றுத்தந்தவர் கலைஞர். அதனால்தான் நேற்று சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குறிப்பிட்டு சொன்னேன். பள்ளிக்கல்விக்கு பெருந்தலைவர் காமராஜர் என்றுசொன்னால் கல்லூரி கல்விக்கு கலைஞர் என்று நான் குறிப்பிட்டுச் சொன்னேன். அந்த வகையில் உயர்கல்விக்கு இந்த காலம் பொற்காலமாக இருக்கும் என வலியுறுத்தி பேசியிருக்கிறேன். அதனை நான் இங்கேயும் வலியுறுத்துகிறேன்'' என்றார்.