Published on 15/07/2018 | Edited on 15/07/2018
காமராஜரின் 116வது பிறந்தநாள் விழா விருதுநகரில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் கொண்டாடப்பட்டது. அதோடு, கல்விக் கண்ணை திறந்த காமராஜரின் கல்வி திருவிழா அங்குள்ள கல்லூரி வளாகத்தில் பெரிய அளவில் நடந்தது. அதில் நாடார் மகாஜன சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த சங்கத்தின் அழைப்பின் பேரில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அமைச்சர் ராஜலட்சுமி, திண்டுக்கல் சீனிவாசன் உட்பட அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் பங்கேற்றனர். முன்னதாக காமராஜர் சிலைக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும், அமைச்சர் ராஜலட்சுமியும் மாலை மரியாதை செலுத்தினர்.
விழாவின் ஆரம்பத்தில் பேசிய தமிழக பாஜகவின் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், தமிழக அரசியலில் எப்படி செயல்பட வேண்டும் என்று கற்பித்தவர் காமராஜர். உண்மையான, தூய்மையான, நேர்மையான அரசியல்வாதியாக இருந்தார் என்று புகழாரம் சூட்டினார்.
அதைத்தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காமராஜரின் புகழை ஆரம்பம் முதல் கடைசி வரை வாழ்த்தி பேசினார். காமராஜர் காலத்தில் தான் தமிழ்நாட்டில் பல்வேறு அணைக்கட்டுகள் கட்டப்பட்டு விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்தார்.
கிராமப்புற ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக கல்வியை கொண்டு வந்து, கல்வி கண் திறந்தவர் காமராஜர் என்று பாமர மக்களால் பாரட்டு பெற்றவர். கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியவர். இன்று பலரும் படித்து அதிகாரிகளாளக மாறியதற்கு காமராஜரின் கல்வி புரட்சியே காரணம். முதலமைச்சர் என்றால் அது கர்மவீரர் காமராஜர் ஒருவர் தான் என்று வாழ்த்தி பேசினார்.