கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ளது நாகல் குழி. இந்த ஊரைச் சேர்ந்தவர் 70 வயது பெரியான். இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. இவர் தனக்குத் துணையாக அவரது பத்து வயது பேத்தி நீரோஷாவுடன் வழக்கம்போல் இரவு சாப்பிட்டுவிட்டு அவரது குடிசை வீட்டில் படுத்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
நடு இரவு ஒரு மணி அளவில் அவர்களது கூரை வீடு திடீரென்று தீப்பிடித்து மளமளவென எரிந்துள்ளது. தீயின் தாக்கத்தினால் திடுக்கிட்டு எழுந்த நிரோஷா தனது தாத்தாவை தீயிலிருந்து காப்பாற்றுவதற்காக எழுப்பியுள்ளார். உடல்நிலை சரியில்லாத பெரியான், வீட்டிற்கு வெளியே வர முடியாமல் தடுமாறி உள்ளார். உடனே நிரோஷா தாத்தாவை வீட்டை விட்டு வெளியே அழைத்து வருவதற்கு, உதவி செய்வதற்காக பக்கத்துத் தெருவில் குடியிருந்த தனது பெற்றோர் வீட்டுக்கு ஓடி அவர்களிடம் தகவல் கூறி அழைத்து வந்துள்ளார்.
அதற்குள் அந்த வீடு முழுவதும் தீப்பற்றி திகுதிகுவென எரிந்து கொண்டிருந்தது. இதைக் கண்டு பதறிப்போன அக்கம்பக்கத்தினர் சங்கராபுரம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எரிந்த வீட்டில் முதியோர் பெரியாரின் உடலை சடலமாகக் கண்டெடுத்தனர். வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முதியவர் பெரியான் தீயில் சிக்கி இறந்து போனார். இதுகுறித்து தகவலறிந்த பகண்டை கூட்ரோடு போலீசார் முதியவர் பெரியானின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் விசாரணையில் மின்கசிவு காரணமாக அந்த வீடு இரவு நேரத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது எனக் கண்டறிந்துள்ளனர். இது குறித்து போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். எரிந்த வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் தத்தளித்த பெரியவர் ஒருவர், தீயில் சிக்கி இறந்துபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.