கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகில் உள்ள தகரை கிராமத்தைச் சேர்ந்தவர் செங்கோட்டையன்(73). இவருடன் வசித்து வந்த அவரது மனைவியின் தங்கை பாப்பு(60) என்பவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த போது கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து செங்கோட்டையன் அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தார்.
அவரது விசாரணையில் செங்கோட்டையன் வீட்டுக்கு அருகில் வசிப்பவர்கள் செங்கோட்டையன் வீட்டில் வேலைக்கு வருபவர்கள் என பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தினார். அதில் செங்கோட்டையன் வீட்டில் வேலை செய்துவரும் தங்கவேல் என்பவரது மகன் கார்த்திக்(30) என்பவரிடம் நடத்திய விசாரணையின்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார்.
அதையடுத்து அவரிடம் போலீசார் தங்கள் பாணியில் விசாரணையை நடத்தியுள்ளனர். அப்போது அவர் பாப்புவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், “நான் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் படித்துள்ளேன். சில ஆண்டுகளாக இஸ்ரோவில் தற்காலிக விஞ்ஞானியாக பணிபுரிந்து வருவதாக ஊர் மக்களிடமும் எனது நண்பர்களிடம் தெரிவித்ததோடு என்னுடைய இருசக்கர வாகனத்தில் இஸ்ரோ சயின்டிஸ்ட் என்று எனது பெயரையும் ஸ்டிக்கர் மூலம் தயார் செய்து ஒட்டிக்கொண்டு ஊரில் வலம் வந்தேன். இதைப் பார்த்து ஊர் மக்கள் நண்பர்கள் எல்லாம் என்னைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். என் மீது மிகுந்த மரியாதை கொண்டனர்.
இதை பயன்படுத்தி நண்பர்களிடம் பணம் அதிக அளவில் கடன் வாங்கினேன். அந்தப் பணத்தைக் கொண்டு வீடு ஒன்றை கட்டி வருகிறோம். இந்தநிலையில், நான் இஸ்ரோவில் பணி செய்யவில்லை என்பதை நண்பர்கள் எப்படியோ தெரிந்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் கடன் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு எனக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். அதன் காரணமாக கடனை அடைப்பதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருந்தேன். அப்போது எனது தந்தை வேலை செய்து வரும் செங்கோட்டையன் வீட்டில் கொள்ளையடிக்க முடிவு செய்து அதற்கான நேரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். செங்கோட்டையன் அவரது மகன் கார்த்திக் திருமண பத்திரிக்கை கொடுப்பதற்காக ராசிபுரம் சென்றதை அறிந்தேன். அன்று இரவு செங்கோட்டையின் வீட்டுக்குள் புகுந்து வீட்டில் தனியாக இருந்த பாப்புவை கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த 6 பவுன் நகை, 12 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து அந்த நகையை விற்று கடன் கொடுப்பதற்காக முடிவு செய்திருந்தேன். அதற்குள் நீங்கள் என்னைப் பிடித்து விட்டீர்கள்” என்று போலீசாரிடம் கார்த்திக் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து கார்த்திக்கை கைது செய்த போலீசார், அவர் கொள்ளையடித்த 12 ஆயிரம் பணம், 6 பவுன் நகையையும் பறிமுதல் செய்தனர். பாப்பு கொலைச் சம்பவம் நடந்து 12 மணி நேரத்தில் சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான காவல்துறையினர் சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்தியசீலன், மணிகண்டன், மாவட்ட குற்றப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் அனந்தராஜ் உள்ளிட்ட தனிப்படை போலீசாரை திறமையை பாராட்டி மாவட்ட எஸ்.பி. செல்வகுமார் பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார். கொலை சம்பவத்தில் முறையாக விசாரணை செய்து உண்மையான குற்றவாளியை போலீசார் விரைந்து கைது செய்துள்ள தகவல் சின்ன சேலம் பகுதி மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.