கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் சாலையில் உள்ள மூரார்பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (வயது 32). இவர் சங்கராபுரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். தற்போது இவரை காவல் நிலையத்திலிருந்து ஆயுதப்படைக்கு பணி மாறுதல் செய்துள்ளனர் அதிகாரிகள். இந்நிலையில் இவருக்கும் இவரது மனைவி கவிதாவுக்கும் (வயது 22) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கவிதாவின் சகோதரர் சர்மா, தனது தங்கைக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்ட பிரச்சனைக்கு என்ன காரணம் என்று விசாரித்துள்ளார்.
அப்போது யுவராஜ் தனது மனைவி கவிதாவை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். அதை மைத்துனர் சர்மா தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த காவலர் யுவராஜ் மைத்துனர் சர்மாவின் தலையில் வெட்டியுள்ளார். இதனால் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார் சர்மா. அக்கம் பக்கம் இருந்தவர்கள் சர்மாவை மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த மருத்துவர்கள் சர்மாவை சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து யுவராஜ் மனைவி கவிதா சங்கராபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், "யுவராஜும் நானும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தையும், ஐந்து மாத பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக காவலர் யுவராஜ் வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பு வைத்துக் கொண்டு என்னை அவ்வப்போது அடித்து துன்புறுத்தி வந்தார். இது குறித்து ஏற்கனவே திருக்கோவிலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அவர்கள் எங்கள் இருவரையும் அழைத்து சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர். ஆனால் அதன் பிறகும் என் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் உள்ள தொடர்பை நிறுத்தவில்லை. இதனால் எங்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்தது. இரண்டு தினங்களுக்கு முன்பு என் குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று தங்கினேன்.
அங்கு வந்த யுவராஜ் என்னை மிரட்டி உனக்கு என்னை பிடிக்கவில்லை எனக்கு நீ விவாகரத்து கொடுக்க வேண்டும் இல்லையென்றால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று கூறி மிரட்டியதோடு அரிவாளால் வெட்ட வந்தார். அப்போது எனது அண்ணன் சர்மா தடுக்க முயன்றார் . இதனால் மேலும் கோபமடைந்த யுவராஜ், எனது அண்ணன் சர்மா தலையில் வெட்டினார்" இவ்வாறு தனது புகாரில் தெரிவித்துள்ளார். இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மூரார்பாளையத்தில் சர்மாவின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சர்மாவை அரிவாளால் வெட்டிய யுவராஜை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருக்கோவிலூர் டிஎஸ்பி பழனி, சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர்கள் நரசிம்ம ஜோதி, ஜெயமணி மற்றும் போலீசார் விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, காவலர் யுவராஜ் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் மறியல் கைவிடப்பட்டது. இதனால் கள்ளக்குறிச்சி சங்கராபுரம் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. யுவராஜ் தந்தை ராமச்சந்திரன் காவல்துறையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியில் இருந்து ஓய்வு பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.