கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்த 66 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வந்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே இந்தச் சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என அதிமுக சார்பில் இன்பதுரை, பாமக சார்பில் கே.பாலு, பாஜக சார்பில் ஏற்காடு ஏ.மோகன்தாஸ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த செப்டம்பர் மாதத்தில் நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படாமல் இருந்து வந்தது.
இத்தகைய சூழலில் தான் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமார், பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த மாதம் 20ஆம் தேதி (20.11.2024) வழங்கியது. அதில், ‘கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்படுகிறது. இதில் எவ்வித குறுக்கீடும் இருக்கக் கூடாது. இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விசாரணைக்காக மாநில காவல்துறையினர் தங்களிடம் உள்ள ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இருப்பினும் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டன. இது தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அந்த வகையில் இந்த வழக்கு இன்று (17.12.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ‘ கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கில் தமிழக காவல்துறையினர் விசாரணையை முடித்துவிட்டனர்’ எனத் தெரிவித்தனர். அப்போது நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில், “இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. எனவே கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் விசாரிக்கலாம். எவ்வித தடையும் இல்லை” எனத் தெரிவித்துள்ளனர்.