மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் கலைஞர் என்று கலைஞரின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் திமுக மாநில துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி பேசினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஒன்றியம் செம்பட்டியில் இருக்கும் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் 97 வது பிறந்தநாளை முன்னிட்டு மாற்றுத்திறனாளிக்கு உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி .செந்தில் குமார் தலைமை தாங்கினார். இந்த விழாவில் கலைஞரின் திருவுருவ படத்திற்கு ஐ.பி. மாலை அணிவித்து மலர் தூவி வணங்கிய பின்பு மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மற்றும் பலசரக்கு உள்ளிட்ட நிவாரண உதவிப் பொருட்களை வழங்கினார்.
அதன்பின் பேசிய மாநில துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமியோ... "முத்தமிழ் அறிஞர் கலைஞர் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார். ஊனமுற்றோர் என்று அழைக்கப்படும்போது அவர்கள் மனம் பாதிக்காமல் இருக்க மாற்றுத்திறனாளிகள் என்று அழைக்க செய்தார். டாக்டர் கலைஞர் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு சலுகைகளை அறிவித்து அவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் கலைஞர். இப்படி அவருடைய 97 ஆவது பிறந்தநாள் விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று கூறினார்.
இந்த விழாவில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் தண்டபாணி, மாநில வர்த்தக அணி துணை செயலாளர் ஜெயன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாஸ்கரன், ஆத்தூர் ஊராட்சி பெருந்தலைவர் ஈஸ்வரி மகேஸ்வரி முருகேசன், ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பிள்ளையார்நத்தம் முருகேசன், ரெட்டியார்சத்திரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சத்தியமூர்த்தி, அம்பாத்துரை ரவி, விவேகானந்தன் உள்பட கட்சி பொறுப்பாளர் பலர் கலந்து கொண்டனர்.