வெளிமாவட்டமல்ல, வெளிநாடுகளிலிருந்தும் கூட கொடூரக் கரோனாத் தொற்றிற்கு அச்சப்பட்டு மக்கள் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். அப்படித் திரும்புவர்கள் மூலமாக உள்ளூரில் தொற்று பரவாமல் தடுக்க, அவர்கள் வருகிற பார்டர் செக் போஸ்ட்களில் சோதனை செய்யப்பட்டு கரோனா பாசிட்டிவ் என்றால் சிகிச்சைக்கும் நெகட்டிவ் என்றால் அந்தப் பகுதியிலுள்ள தனிமைப் படுத்துதல் பகுதிகளில் குவாரண்டைன் செய்யப்படுகிறார்கள்.
அது போன்ற அரசு குவாரண்டைன் முகாம்களில், அவர்களுக்கான அடிப்படை வசதிகளான உணவு, குடிநீர், கழிப்பிட வசதிகள் சரியில்லை. பெருந் துயரை அனுபவிக்கிறார்கள் என்கிற புகார்கள் கிளம்புகின்றன. இதனை அறிந்த தென்காசி மாவட்டத்தின் கடையநல்லூரின் எம்.எல்.ஏ.வான முகமது அபுபக்கர் நாளை கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். கரோனாத் தொற்று அச்சம் காரணமாக வேலையின்றியும் துபாயில் தவித்த 89 தமிழர்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அயலாக அமைப்பான அமீரகக் காயிலேத் மில்லத் பேரவை சார்பில் தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த ஜூன் 28ஆம் தேதி தமிழகம் அழைத்து வந்தனர். இதற்கான வேலைகள், செலவுகளை தன் சொந்தச் செலவின் மூலம் மேற்கொண்டார் கடையநல்லூர் எம்.எல்.ஏ.வான முகம்மது அபுபக்கர்.
திருவனந்தபுரத்திலிருந்து அவர்கள் புளியரை சோதனைச் சாவடி வழியாகக் கடையநல்லூர் அழைத்து வரப்பட்டவர்கள் அங்குள்ள தனியார் பள்ளியில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்குக் கரோனா பரிசோதனை நடத்தி ஆறு நாட்களாகியும் சோதனை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. அவர்களில் 4 பேர் கர்ப்பிணிகள் 4 குழந்தைகளும் அடக்கம்.
இதனிடையே முகாமில் சாதாரணமாக அடித்தட்டு வசதியான டாய்லெட், உணவு, குடிநீர் கூட முறையாக அதிகாரிகள் தரப்பில் செய்து தரப்படாததால் பெரும் துயரை அனுபவித்து வருகின்றனர். இதனையறிந்த எம்.எல்.ஏ. அபுபக்கர் காலதாமதமில்லாமல் சோதனை முடிவை அறிவிக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட பெண்களை விடுவிக்கவேண்டும் என வலியுறுத்தி நாளை கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவித்துள்ளார்.
அவரிடம் நாம் பேசினோம்,
இக்கட்டான காலம் இது. பரிசோதனை முடிவு வரத் தாமதமாவது தொற்றுப் பரவலை அதிகரிக்கச் செய்துவிடும். 6 நாட்களாகியும் முடிவுகள் அறிவிக்கப்படாமல் முகாம்களில் கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டோரும் அடிப்படை வசதி இல்லாமல் அல்லல்படுவதோடு மன உளைச்சலில் உள்ளனர். கர்ப்பிணிப் பெண்களை அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்த வேண்டும் என்பது விதி. முறையான உணவில்லை, டாய்லெட் போனால் பக்கெட் கிடையாது. சிரமத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசு விதிப்படி, கர்ப்பிணிப் பெண்களை அவர்களின் வீடுகளிலேயே தனிமைப் படுத்தல் செய்யப்பட வேண்டும், என்று கலெக்டர் தாசில்தார், தலைமைச் செயலர் சண்முகம் என அனைவரிடமும் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
எனவே அவர்களை விடுவிக்கக்கோரி ஜூலை 6ஆம் தேதி திங்கள்கிழமை எனது தலைமையில் தாலுகா அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்கிறார் எம்.எல்.ஏ.