10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தேர்வு காலத்தில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக 'தன்னம்பிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி' நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் குகநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைசெல்வன் கலந்துகொண்டார். அப்போது அவர் தேர்வு எழுத இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்துப் பேசுகையில், "தேர்வில் வெற்றி பெற வேண்டும் என பல மாணவர்கள் விழுந்து விழுந்து படிப்பார்கள். அப்படிப் படிப்பவர்கள் தேர்வு அறையில் கேள்வித்தாளை வாங்கியவுடன் எல்லாம் படித்தது போல் தெரியும். ஆனால், எழுத மறந்து விடுவார்கள். எனவே, மாணவர்கள் தேர்வுக்காலங்களில் ஏற்கனவே படித்ததை மறுபடியும் சீராகப் படித்து எழுதிப் பார்க்க வேண்டும். மனதில் படித்ததை ஆழமாகப் பதியவைக்க வேண்டும். இப்படி மாணவர்கள் நேரத்தைக் கணக்கிட்டுப் படித்தால் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி அடைவார்கள். எந்த நிலையிலும் தன்னம்பிக்கையை விட்டுவிடாமல் அனைத்து மாணவர்களும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு படித்து அனைவரும் தேர்வில் வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்க்க வேண்டும்" என்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பனை நல வாரிய உறுப்பினர் பசுமை வளவன், சுவாமி சகஜானந்தா ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் நீதிவளவன், சுவாமி சகஜானந்தா மணிமண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் நடராஜன், ஆசிரியர் மன்றச் செயலாளர் மலைராஜ், விடுதி காப்பாளர் பழனி, பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.