Skip to main content

“ஒளிவீசும் அறிவாயுதக் கிடங்கு” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கி.வீரமணி வாழ்த்து

Published on 01/03/2023 | Edited on 01/03/2023

 

K Veeramani birthday wish to MK Stalin

 

உழைப்பால் உயர்நிலையை அடைந்த உன்னத தலைவர் - அடுத்த தலைமுறை - 2024 மக்களவைத் தேர்தல் அவரின் இலக்கு! ஆண்டு 70 காணும் சமூகநீதி சரித்திர நாயகராம் மாண்புமிகு மானமிகு முதலமைச்சரை தாய்க்கழகம் உச்சிமோந்து வாழ்த்தி மகிழ்கிறது! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

 

கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை; ‘திராவிட மாடல்’ என்று தமிழ்நாட்டில் நூறாண்டு ஆட்சியான திராவிடர் ஆட்சியின் நீட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி - ஒரு மகத்தான வரலாறு படைத்து ‘அய்யிரண்டு திசைமுகத்தும்’ அதன் புகழ் பரப்பும் ஆட்சியாக தகத்தகாய ஒளிவீச்சுடன் திகழுவதற்கு முழுமுதற்காரணம் இன்றைய முதலமைச்சர் - சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மானமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் ஆவார்.

 

இன்று (1.3.2023) அவர் எழுபதாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதுடன், தனது ஆளுமைத்திறனை அகிலமும் பாராட்டும் வண்ணம் புதியதோர் திருப்பத்தை அரசியலில் இருமுனை நோக்கி செலுத்துகிறார்! 1. ஓர் இலக்கு அடுத்த தலைமுறை 2. மறு இலக்கு 2024 மக்களவை பொதுத்தேர்தல்.

 

இந்திய அரசியலில் பாசிசத்தை வீழ்த்தி, பண்பட்ட ஜனநாயகத்தின் மாண்புகளையும் காப்பாற்றி - தற்போது சனாதனம் என்ற திணிப்பினை எதிர்த்து, திராவிடத் தத்துவம் என்ற ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற சமூகநீதிக் கொடியை எவரும் எட்ட முடியாத உயரத்தில் பறக்கவிட தனது கடும் உழைப்பை நல்கி உறுதி,  சூளுரை நாளாகக் கொண்டு, இளமை குன்றா இணையிலாத் தொண்டு செய்ய முந்துகிறார்.

 

அவர் நேற்று முன்தினம் (27.2.2023) விடுத்த 70 ஆம் ஆண்டு பிறந்த நாள் செய்திகளில் பல வைர வரிகள் மறக்க முடியாத, மறக்கக் கூடாத வரலாற்றுப் பதிவுகள் ஆகும். “பொதுவாழ்க்கை என்பது பொழுதுபோக்குக்கான பூங்கா அல்ல; அது ஓய்வில்லாத போர்க்களம்!’ என்பதைத் தலைவர் கலைஞரின் பேச்சுகளாலும், எழுத்துகளாலும், அவரது செயல்களாலும் அப்போதே உணர்ந்துகொண்டேன். அவர் தந்தை பெரியாரிடமும், பேரறிஞர் அண்ணாவிடமும் அதனைப் பயின்றிருந்தார். தன்னலம் கருதாமல் - நன்றியை எதிர்பாராமல் - பதவிப் பொறுப்புகளுக்கு வராமல் - வசவுகளையும் விமர்சனங்களையும் மட்டுமே சந்தித்து - கல்லடியையும் சொல்லடியையும் கணக்கின்றி எதிர்கொண்டு, திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளான சமூகநீதியை - சுயமரியாதையை - பகுத்தறிவுச் சிந்தனைகளைப் பரப்புரை செய்தவர் அறிவாசான் தந்தை பெரியார். அவரிடம் பயின்ற பேரறிஞர் அண்ணா, பொதுவாழ்க்கை என்பது பஞ்சு மெத்தை அல்ல, முள் படுக்கை என்பதை உணர்ந்தவர். ஆனாலும், திராவிட சமுதாயத்தை - தமிழ் மொழியை - தமிழினத்தை - தமிழ்நிலத்தை மேம்படுத்த அந்த முள் படுக்கையான பொதுவாழ்க்கையையே அவர் தேர்வு செய்ததுடன், தன் தம்பிகளையும், “மக்களிடம் செல் - மக்களுடன் பழகு - மக்களுக்காக உழைத்திடு” என்று வலியுறுத்தியவர்.

 

தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் கழகத்தின் உடன்பிறப்பாக, மக்களுக்கான தொண்டனாக, உங்களில் ஒருவனாக என் பொதுவாழ்வுப் பணியை மேற்கொண்டு வருகிறேன். நெருக்கடிநிலைக் கால மிசா சிறைவாசமும் சித்திரவதைகளும் எனக்கு வெறும் தழும்புகளல்ல; பொதுவாழ்க்கையில் முதன்முதலாக கிடைத்த பரிசுகள் - பதக்கங்கள்! இளைஞரணிச் செயலாளர் பொறுப்பு என்பது பதவியல்ல; கழகம் எனக்குத் தந்த பாடத்திட்டம்! அதனை நல்ல முறையில் தொடர்ந்து பயின்று, தலைவர் கலைஞர் வைத்த தேர்வுகள் அனைத்திலும் வெற்றி பெற்றேன். பகுதி பிரதிநிதியில் தொடங்கி கழகத் தலைவர் என்ற உச்சம் வரை பகுதி பிரதிநிதி, மாவட்டப் பிரதிநிதி, பொதுக்குழு உறுப்பினர் எனக் கழகத்திற்காகத் தொடர்ந்து உழைத்து, படிப்படியாக உயர்ந்து, கழகத் துணைப் பொதுச்செயலாளர், பொருளாளர், செயல் தலைவர் என வளர்ந்து, கழகத் தலைவர் என்ற பொறுப்பினை உங்கள் அன்பாலும் ஆதரவாலும் சுமந்திருக்கிறேன்.

 

ஆயிரம் விளக்கு தொகுதியில் 4 முறை சட்டமன்ற உறுப்பினர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னையின் முதல் மேயர், இரண்டாவது முறையும் மக்கள் வெற்றி பெறச் செய்த மேயர், உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், மூன்று முறை கொளத்தூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் என மொத்தம் ஏழு முறை சட்டமன்ற உறுப்பினர் எனப் பயணத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் பேராதரவால் முதலமைச்சர் என்ற பொறுப்பினை வகிக்கிறேன்.

 

கட்சிப்பொறுப்பாக இருந்தாலும், ஆட்சிப்பொறுப்பாக இருந்தாலும் உழைப்பு.. உழைப்பு.. உழைப்பு.. என்பதையே எனது செயல்திட்டமாகக் கொண்டுள்ளேன். அதுதான் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட விலைமதிப்பில்லாத சொத்து - தலைவர் அவர்களிடமிருந்து பெற்ற பாராட்டுப் பத்திரம்! அந்த உழைப்பை இப்போதும் தொடர்கிறேன். என் சக்திக்கு மீறி உழைப்பதில் ஆர்வமாக இருக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

 

இது வெறும் உறுதி அல்ல நண்பர்களே! ‘திராவிட மாடல்’ ஆட்சியும், அதன் சிதைக்க முடியா சிந்தனைக் கருவூலமும் தந்த முதிர்ச்சியின் முத்தான விளைச்சல்! சத்தான கொள்கை லட்சியத்தின் இலக்கு நோக்கிய இணையற்ற பயணம்!! அனைத்திந்திய தலைவர்கள் வருகை - பாராட்டு! அது மட்டுமா? இந்த பிறந்த நாளில், அவரை வாழ்த்திட, திராவிடத் திருவிளக்கின் ஒளியை இந்தியா முழுவதும் பாய்ச்சிட, பல தலைவர்கள் - அனைத்திந்திய தலைவர்கள் இந்தத் திராவிட பூமிக்கு வருகிறார்கள். எதற்கு? அவரே அடக்கத்துடன் அருமையாகக் குறிப்பிடுகிறார், அவரது பிறந்த நாள் செய்தியில், “தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் திகழ வேண்டும் என்பதே என்னுடைய இலக்கு. தமிழ்நாடு அத்தகைய நிலையை அடைவதுடன், இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மைச் சிதையாமல், ஒருமைப்பாடு குலையாமல், மத நல்லிணக்கம் மிக்க ஜனநாயகம் தழைத்தோங்கும் நிலை மீண்டும் உருவாக வேண்டும் என்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் நோக்கமாகும்” எனவே, பிறந்த நாள் வெறும் கொண்டாட்டம் அல்ல; கொள்கைப் பாதுகாப்பு அறப்போர் உறுதிமொழி!

 

இதைத்தான் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் திறமைமிகு நம் முதலமைச்சர் உலகுக்கு உணர்த்திடும் உறுதி ஏற்று செயலாக்கும் ஆளுமை நோக்கி மக்களின் பேராதரவு என்ற புதுப்பொலிவுடனும், வலிமையுடனும் தனது 70 ஆம் ஆண்டுப் பயணத்தில், 50 ஆண்டு பொதுவாழ்க்கையின் தொண்டு - தொல்லைகளைத் தொய்வின்றி  கொண்டு செலுத்த களத்திற்குள் நுழைகிறார்.

 

அவரது களம் விரிகிறது - அனைத்திந்தியாவிலேயே அறிவார்ந்த ஆளுமையின் காரணமாக - தொடர்ந்து புத்தம் புதிய பெரியார் என்ற பேராயுதக் கிடங்கில், அண்ணா, கலைஞர் என்ற பட்டறையின் உதவியுடன் அவர் வென்றெடுப்பார் என்று வாழ்த்தும் கோடானு கோடி நெஞ்சங்களோடு திராவிடர் கழகமாம் தாய்க்கழமும் தன்னை இணைத்து, உச்சிமோந்து, வாழ்த்துவதில் எல்லையற்ற மகிழ்ச்சியைப் பெறுகிறது! அவர் தனி மனிதரல்ல! தளராத தன்னம்பிக்கையின் ஒளிவீசும் அறிவாயுதக் கிடங்கு! வாழ்க, வாழ்க பல்லாண்டு. இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்