ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து கூட்டமைப்பு தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு முழுவதும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பணிமனையில் இருந்து 50 சதவீதம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே குடியாத்தம் பணிமனையில் இருந்து எவ்வளவு பேருந்துகள் இயக்கப்படுகிறது என ஆய்வு செய்ய குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திமுகவை சேர்ந்த அமலு விஜயன், ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம், நகர மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் பணிமனைக்கு வந்தனர்.
அப்பொழுது அங்கிருந்த அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் பணிமனைக்குள் வந்த எம்எல்ஏ மற்றும் நகர மன்ற தலைவர் மற்றும் ஒன்றிய தலைவர் ஆகியோரை வெளியே போகுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தாங்கள் மக்கள் பிரதிநிதி அதனால் வந்துள்ளோம் என அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். இதனால் குடியாத்தம் பணிமனை பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.