கும்பகோணம் பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதனை திராவிட கழக தலைவர் கி.வீரமணி முதல் கையெழுத்து போட்டு தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், "ஆர்.எஸ்.எஸ் வடிவமான பாஜக திட்டமிட்டு நாட்டை பிளவுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் அரசியல் சாசனத்திற்கு எதிரான வேலைகளை செய்துவருகிறது. குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருவதை, தனி மனிதர்கள் புகுந்து போராடுபவர்களை துப்பாக்கி ஏந்தி சுடும் அளவிற்கு டெல்லியின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது.
தேசபக்தி என்ற பெயரால் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உள்ளவர்களை சுட்டுத் தள்ளுங்கள் என்று பாசிச ஆட்சிகளில் கூட நடக்காத ஒன்றை பாஜக அரசு செய்து வருகிறது. தமிழக மண்ணில் பகுத்தறிவு மற்றும் பெரியார் மண்ணில் அனைத்து மக்களையும் பக்குவப்படுத்தி உள்ளது. குடியுரிமைச் சட்டத்தை உலகநாடுகள் கண்டிக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக ஐரோப்பிய யூனியன் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
ஜனநாயகத்தில் வாக்கு அளித்தவருக்கும் பிரதமர், வாக்களிக்காமல் இருக்கும் குடிமக்களுக்கும் பிரதமர் என்பதை உணர வேண்டும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி நடத்தினோம். பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்த விலை கொடுத்தும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிப்போம் விரட்டுவோம்.
நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று குடியரசுத் தலைவரிடம் திமுக எம்பிக்கள் அளிப்பார்கள். அதன் ஒரு பகுதியாக கும்பகோணத்திலே கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளது. கும்பகோணம் எப்போதுமே போராட்டம் குணம் உள்ள ஊர். கும்பகோணம் போராட்டம் ஒரு நாள் கூட தோற்றது கிடையாது. இதற்கு திராவிட இயக்க வரலாற்றில் ஏராளம் சான்று உள்ளது.
மக்கள் ஒவ்வொருவரும் வீடு வீடாக சென்று கையெழுத்தியக்கத்தை சிறப்பாக தொடங்கி வைக்க வேண்டும். ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையும் சமூக நீதியும் காப்பாற்றப்பட வேண்டும். மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்ட மசோதா போராட்டத்தை அலட்சியப்படுத்தினால் கடுமையான விலையை தேர்தல் காலத்தில் பாஜக சந்திக்கும். எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு குடியுரிமை திருத்த சட்ட மசோதா திரும்பப் பெறும்வரை எங்களது போராட்டம் ஓயாது ஓயாது" என்று தெரிவித்தார்.