Skip to main content

அணைக்கிற கைதான் உடைக்கும்! -அமைச்சரின் ஆத்திரத்தில் நொறுங்கிய கேமரா?

Published on 21/06/2019 | Edited on 21/06/2019

 

காமெடியாகவும்,  சீரியஸாகவும்  “நாக்கை அறுப்பேன்” என்று விவகாரமாகவும் பேசிவருபவர் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. செய்தியாளர்கள் என்ன கேள்வி கேட்டாலும் சளைக்காமல் பதில் சொல்வார்.  ‘சுவாரஸ்யமாக ஏதாவது பேசுவார்;  அது  பிரேக்கிங் நியூஸ் ஆகிவிடக்கூடும்’  என்ற நம்பிக்கையுடன், செய்தியாளர்கள் அவருடைய வாயைக் கிளறுவதுண்டு. செய்தித்துறை அமைச்சர் பொறுப்பிலும் இருந்தவர் என்பதால், செய்தியாளர்களின் மனதறிந்து நடந்துகொள்வார். அப்படிப்பட்ட கே.டி.ராஜேந்திரபாலாஜி,  செய்தியாளர் ஒருவரிடம் இன்று ஏன் அப்படி நடந்துகொண்டார்? 

 

k

 

விவகாரம் இதுதான் - 

‘அதிமுகவின் கட்டுப்பாட்டை மீறி ஊடகங்களிடம் பேசினால் நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும்’ என்று  ஆலோசனைக் கூட்டத்தில் கடுமையாக எச்சரித்திருக்கும் நிலையில், முன்புபோல் அதிரடி கருத்துக்களை செய்தியாளர்களிடம்  கே.டி.ராஜேந்திரபாலாஜி வெளியிடுவதில்லை. அரசின் திட்டங்கள் குறித்தும், அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்தும் அவர் தொடர்ந்து பேட்டி அளித்துவருவதால், பழைய விறுவிறுப்பு  ‘மிஸ்ஸிங்’ ஆகிவிட, உப்புச்சப்பு இல்லாத விஷயங்களுக்கு சேனல்களும் முன்புபோல் முக்கியத்துவம் தருவதில்லை. 

 

k

 

இன்று காலை,  அமைச்சரின் சொந்த ஊரான திருத்தங்கல்லில் நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரமோற்சவ தேரோட்டம் நடந்தது. கே.டி.ராஜேந்திரபாலாஜிதான் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது,  பெருமளவில் பக்தர்கள் கூடிய தேரோட்டத்தை  ‘கவரேஜ்’ செய்வதற்கு, ஆளும்கட்சி சேனலின் நியூஸ் ஜெ செய்தியாளரை அமைச்சரின் கண்கள் தேடின. அவர் காணப்படவில்லை.   இன்று யோகா தினம் என்பதால், செய்தியாளர்களும் ஊடகவியலாளர்களும்,  பள்ளிகளில் நடந்த யோகா நிகழ்ச்சிகளுக்குச் சென்றுவிட்டனர். அதனால், வழக்கமாக அமைச்சர் நிகழ்ச்சிகளுக்குப் பெருமளவில் வரும் செய்தியாளர்கள் இன்று வரவில்லை. நியூஸ் ஜெ. சிவகாசி தாலுகா செய்தியாளர் விக்னேஷும் வராததால் டென்ஷன் ஆகிவிட்டார்.

 

நியூஸ் ஜெ மாவட்ட செய்தியாளர் கண்ணனிடம் அமைச்சர் தரப்பில் விசாரித்தபோது, “இல்லையே.. விக்கி அங்குதான் இருக்கிறார்.” என்று கூற, சில நிமிடங்களிலேயே, திருத்தங்கல் நகராட்சி அலுவலகத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்பாக ஆஜரானார் விக்னேஷ்.  ‘முக்கிய நிகழ்ச்சி என்று தெரிந்தும் ஏன் வரவில்லை?’ என்று அமைச்சர் கேட்க,  “நான் வீடியோ எடுத்துட்டேன்..” என்று சமாளித்திருக்கிறார் விக்னேஷ். “எங்கே நீ எடுத்ததைக் காட்டு..” என்று கேமராவை வாங்கிப் பார்த்துவிட்டு, ஆத்திரத்தில் திட்டியிருக்கிறார். 

 

அடுத்த சில நிமிடங்களில்,   ‘நியூஸ் ஜெ செய்தியாளரிடமிருந்து கேமராவைப் பிடுங்கி அமைச்சர் உடைத்துவிட்டார்.. நொறுங்கி சுக்கு நூறான அந்தக் கேமராவின் விலை ரூ.55000’ என்று வாட்ஸ்ப்பில் தகவல் தீயாகப் பரவ, விருதுநகர் மாவட்ட ஜெ. நியூஸ் செய்தியாளர் கண்ணனைத் தொடர்புகொண்டோம். “என்னது கேமராவை அமைச்சர் உடைச்சாரா? நல்ல ஜோக்கா இருக்கு. கூட்ட நெருக்கடியில், கைதவறி கேமரா கீழே விழுந்து உடைஞ்சிருச்சு. தேவையில்லாம அமைச்சர் பேரை இதுல இழுத்து விட்டா எப்படி?” என்று,  ஜெ. நியூஸ் நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி பேசினார். 

 

அதிமுக திருத்தங்கல் நிர்வாகி ஒருவர் நம்மிடம் “என்னங்க பெரிய கேமரா? அது வெறும் இருபத்தைந்தாயிரமாம். ஐம்பதாயிரத்துக்குக்கூட அமைச்சர் புது கேமரா வாங்கித் தந்திருவாரு. நியூஸ் ஜெ எங்க கட்சி சேனல். அந்த விக்கி எங்க செய்தியாளர். இதெல்லாம் ஒரு விஷயமா? அமைச்சருன்னா டென்ஷன் இருக்கத்தான் செய்யும். ஒண்ணு தெரியுமா? அமைச்சர் யார் யாரைத் திட்டுறாரோ, அவங்களையெல்லாம் பின்னால பெரிசா கவனிச்சிருவார். அமைச்சர் இன்னைக்கு நம்மள திட்ட மாட்டாரா? என்று கட்சியில அவனவன் ஏங்கிக்கிட்டிருக்கான். அமைச்சருக்கு ரொம்ப நல்ல மனசுங்க.  அடிக்கிற கைதான் அணைக்கும்கிறது அமைச்சர் விஷயத்துல எப்பவுமே சரியா இருக்கும்.” என்று அமைச்சர் புராணம் பாடினார்.

 

அந்த அதிமுக நிர்வாகி சொல்வதைப் பார்த்தால், அமைச்சரின் கைதான் கேமராவை உடைத்திருக்கும் போல!  


 

சார்ந்த செய்திகள்