சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 123-வது பிறந்த நாள் விழா அனுசரிக்கப்பட்டது. மேலும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பங்குபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேசிய நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி கலந்து கொண்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் கிராமபுற இளைஞர்களுக்கு வேலையை மேம்படுத்துவது, விவசாயிகளின் நலனை பாதுகாப்பது. உலக அரங்கில் தமிழகத்தை முதலிடத்தில் கொண்டு வருவது குறித்த காங்கிரஸ் கட்சியின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னையில் நடைபெறும் பேரணியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ராகுல்காந்தி கலந்துகொண்டு காங்கிரஸ் கட்சியின் நோக்கங்கள் குறித்து பேசுகிறார்.
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான அரசு மக்களிடம் கொள்ளையடிக்கும் அரசாக உள்ளது. தமிழகத்தில் கட்டுமான தொழில் நலிவடைந்துள்ளது. மணல் தட்டுபாட்டால் கட்டுமான வேலைகள் நடைபெறவில்லை. கட்டுமான வேலைகள் குறைந்துள்ள நிலையில் அதற்கான சிமெண்டு உள்ளிட்ட தளவாட பொருட்களின் விலைகள் குறையாமல் உள்ளது. இதனால் தனியார் நிறுவனங்களிடம் கைகோர்த்து அரசு கூட்டுக் கொள்ளை அடிக்கிறது.
தமிழகத்தில் தனியார் பள்ளி, கல்லூரிகள் பல லட்சம் வாகனங்கள் உள்ளது. இதற்கு ஏற்கனவே வேக கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட்டுள்ளது . தற்போது அதனை அகற்றிவிட்டு புதிய கருவியை நிறுவவேண்டும் அவர்கள் கூறும் கருவியை தான் நிறுவ வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இதனால் பல லட்சம் கோடி பொருட்கள் விற்பனையாகும். இதிலிருந்து கமிஷன் பெறவே இதுபோன்ற நடவடிக்கையை எடுத்துள்ளனர். இதிலும் கொள்ளைக்கு வழி வகுக்கும்.
தஞ்சை பெரிய கோயிலில் தமிழ் முறைப்படி குடமுழுக்கு விழாவை நடத்த வேண்டும். குடியுரிமை சட்டத்தில் அமித்ஷா, மோடி சர்வாதிகாரி போல் அவர்களது நடவடிக்கை உள்ளது. 5,8 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு என்பது தவறான நடவடிக்கை. திமுக குறித்து அறிக்கை வெளியிட்டது கூட்டணி கட்சிக்கு ஜனநாயக உரிமை உள்ளது. அதில் எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க மாநில ஆளுநர்களிடம் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் நகர்பெரியசாமி, அகில இந்திய உறுப்பினர் மனிரத்தினம், மாநில பொதுக்குழு உறுப்பினர் சித்தார்தன், நகரதலைவர் பாலதண்டாயுதம் உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.