இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் எதார்த்தமான நடிப்பில் உருவான க/பெ ரணசிங்கம் திரைப்படத்தில் மாவட்ட ஆட்சியராக ரெங்கராஜ் பாண்டே நடித்திருப்பார். குறைவான நேரங்களே விஜய்சேதுபதி வந்துவிட்டு சென்றுவிடுகிறார். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ், வெளிநாட்டுக்குச் சென்று பிழைக்கப்போன இடத்தில் தன் கணவன் இறந்துவிட்டார் என்ற தகவலை அறிந்து கதறுவதுடன் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு நீண்ட போராட்டமே நடத்தி இருப்பார்.
அப்படியும் பிரதமர் தலையிட்ட பிறகும் கூட யாருடைய சடலத்தையோ கொண்டு வந்து ஒப்படைத்து கணக்கை முடிப்பார்கள். இந்தப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் வரும் 16ஆம் தேதிக்கு பிறகு திரையரங்குகளுக்கும் வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கதை ஒரு நண்பர் சொன்ன ஒற்றைவரியில் இருந்து பிறகு கார்க்கோவில் தினசரி வரும் சடலங்களை பின்தொடர்ந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை கதையாக்கினேன் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார் இயக்குனர் விருமாண்டி.
ஆனால், க/பெ ரணசிங்கம் படத்தின் மூலக்கதை என்னுடையது. 2017-ல் 'தவிப்பு' என்ற தலைப்பில் "கதைசொல்லி" மாத இதழில் வெளியானது. 2018-ல் தூக்குக் கூடை சிறுகதை தொகுப்பில் இடம் பெற்றுள்ளது என்கிறார் எழுத்தாளர் மிடறு முருகதாஸ். இவர் த.மு.எ.க.ச புதுக்கோட்டை மாவட்டக்குழு உறுப்பினரும்கூட. இது குறித்து புகார் கொடுக்கவும் தயாராகி உள்ளார்.
மிடறு முருகதாஸை சந்தித்து பேசிய போது, “புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் தத்தான்விடுதி கிராமத்தைச் சேர்ந்த நான் பல்வேறு கலை, இலக்கிய மேடைகளில் பாட்டு, கதை, கவிதை வாசித்திருக்கிறேன். சிலம்ப பயிற்சியும் கொடுக்கிறேன். எதைப்பார்த்தாலும் எழுதி வைப்பது வழக்கம். இதைப்பார்த்து நண்பர் தூண்டுதலால் மிடறு என்ற ஹைகூ தொகுப்பு வெளியிட்டேன். தொடர்ந்து சிறுகதைகள் எழுதி இதழ்களுக்கு அனுப்பினேன். எல்லாமே பிரசுரம் ஆனது. எங்கள் உறவினர் ஒருவர் வெளிநாடு சென்று இறந்து அவர் உடலை கொண்டுவர ஏற்பட்ட சிரமங்களை நேரில் பார்த்து அதை "தவிப்பு" என்ற தலைப்பில் எழுதி 2017-ல் கதை சொல்லி இதழுக்கு அனுப்பினேன். அந்த கதை குறுநாவலாக வெளிவந்தது. அதன் பிறகு நான் எழுதிய சிறுகதைகளை 'தூக்குக் கூடை' என்ற தலைப்பில் 2018-ல் தனி புத்தகமாக வெளியிட்டேன்.
இப்போது நான் எழுதிய தவிப்பு சிறுகதைக்கு மெறுகேற்றி க/பெ ரணசிங்கம் என்ற பெயரில் திரைப்படமாக வந்துள்ளதை நண்பர்கள் சொல்ல நானும் படத்தைப் பார்த்தேன் மூலக்கதை என்னுடைய தவிப்ப தான் என்பதை அறிந்தேன். என் கதையை பயன்படுத்தும்போது இயக்குனர் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தி இருக்கிறார். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால் உரிய ஆவணங்களோடு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுக்க இருக்கிறேன் என்றார். மேலும் மூலக்கதை என்னுடையது என்பதை இயக்குனர் விருமாண்டி ஏற்றுக் கொண்டு திரையில் என் பெயரையும் சேர்க்க வேண்டும். தவறும்பட்சத்தில் நீதிமன்றம் செல்லவும் தயாராக உள்ளேன் என்றார்.