கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற வினோத் காவல்நிலையத்தில் கொலை செய்யப்பட்டதை கண்டித்து காட்டுமன்னார்கோயில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காட்டுமன்னார்கோவில் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டசெயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன்.
பாலகிருஷ்ணன் பேசியபோது, ‘’தமிழகத்தில் பொதுவாக அதிமுகவின் எடப்பாடி ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து படுகொலைகளும், கொள்ளைகளும் அன்றாட நிகழ்ச்சிகளாக மாறி வரும் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. ஒருபக்கம் ஆணவ கொலைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தில் ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று கேட்டு கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்காக காவல்துறை சார்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதையெல்லாம் பார்த்த பிறகு நீதிபதிகள் ஆணவக்கொலைகளைத் தடுப்பதற்கு உச்ச நீதிமன்றம், உயர் நீதி மன்றங்கள் எல்லாம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தெரிவித்தால் கூட தமிழக அரசால் சொல்லக்கூடிய நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என்று நீதிபதிகள் பகிங்கரமாக விமர்சித்துள்ளனர்.
இந்தநிலையில் காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்கிறோம் நடவடிக்கை எடுக்கிறோம் என்ற பெயரில் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை கைதிகளை சித்திரவதை செய்வது இப்படி படுகொலைகள் நடப்பது தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோன்றுதான் கடந்த மாதம் 11ஆம் தேதி காட்டுமன்னார்கோயில் பகுதியைச் சேர்ந்த வினோத் என்கிற இளைஞரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மறுநாள் காலை காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதில் வினோத் தற்கொலை செய்து கொண்டார் என்று காவல்துறை சொல்வது நம்பிக்கை தருவதாக இல்லை. இதில் வினோத்தை காவல்துறையினர் பலமாக தாக்கியதில் அவர் மரணம் அடைந்துள்ளதாக தெரிகிறது. வினோத் காவல் நிலைய லாக்கப்பில் தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி கட்சியின் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு புகார் கொடுத்தும் கூட சிபிசிஐடி போலீசாருக்கு விசாரணை நடத்த உத்தரவு விடவில்லை.
மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் கேட்க விரும்புவது என்னவென்றால் வினோத் தற்கொலைதான் செய்து கொண்டார். மற்றபடி காவல்துறையினர் அவர் மீது எந்த தாக்குதல்களும் நடத்தவில்லை என்று அவர் நினைத்தால் சிபிசிஐடிக்கு வழக்கை மாற்றி விட வேண்டியதுதானே. சிபிசிஐடி விசாரணைக்கு பிறகு தற்கொலை என்று முடிவு எடுத்தால் நாங்கள் வரவேற்கத் தயார்.
இதுபோல் கடலூர் மாவட்டத்தில் எத்தனையோ வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்ததால் காவல்நிலையத்தில் கொலைசெய்யப்பட்டனர் என கண்டுபிடித்து சம்பந்தபட்ட காவல்துறையினருக்கு தண்டனையும் வாங்கிகொடுக்கப்பட்டுள்ளது. எனவே சிபிசிஐடி கம்யூனிஸ்ட் கட்சிக்கு சொந்தமான போலீசா? அதுவும் தமிழக அரசு போலீஸ் தானே ஆகவே காவல் நிலையத்தில் நடந்த இந்த படுகொலையை அதே காவல்துறையினர் விசாரித்தால் நியாயம் கிடைக்காது ஆகையால் உடனடியாக வினோத் கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு உத்திரவிடவேண்டும். அவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை, இழப்பீடு வழங்கவேண்டும். இதனை செய்யவில்லையென்றால் சிபிசிஐடி விசாரணை கேட்டு நீதிமன்ற கதவை தட்டவும் மார்க்சிஸ்ட் கட்சி அஞ்சாது என்று பேசினார்.
இதனைதொடர்ந்து மார்க்சிஸட் கட்சியின் மாவட்ட செயலாளர் டி.ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர்கள் மூசா, கோ.மாதவன், மாவட்டச்செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன்,அசோகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வாஞ்சிநாதன், ராஜா, மூர்த்தி உள்ளிட்டவர்கள் போராட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார்கள். கூட்டத்தில் பாதிக்கப்பட்ட வினோத் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கட்சியினர் என திறளாக கலந்துகொண்டனர்.
இதனைதொடர்ந்து கூட்டத்தில் கலந்துகொண்ட வினோத் குடும்பத்தினருக்கு கே.பாலகிருஷ்ணன் ஆறுதல் கூறினார்.