Skip to main content

“மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ வெளியிடுவது ஆணவத்தின் உச்சம்” - எம்.பி ஜோதிமணி கண்டனம்

Published on 13/09/2024 | Edited on 13/09/2024
Jyotimani condemns Union Finance Minister on Annapurna Srinivasan issue

கோவை மாவட்டம் கொடிசியாவில் தொழில்துறையினர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று முன் தினம்(11-09-24) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு தொழில் முனைவோர்களுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, ஜி.எஸ்.டி வரி குறைப்பு தொடர்பான பல்வேறு அமைப்பினரும் கேள்விகள் எழுப்பி கருத்து தெரிவித்தனர்.

அப்போது, இனிப்பு, காரம் வகை தின்பண்டங்களுக்கு ஜி.எஸ்.டி வரியில் குளறுபடி இருப்பதாக பேசிய கோவையைச் சேர்ந்த பிரபல உணவகமான அன்னப்பூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன், “பன்னுக்கு ஜி.எஸ்.டி கிடையாது. ஆனால், பன்னுக்குள்ள வைக்குற கிரீமுக்கு 18% ஜி.எஸ்.டி இருக்கு.. கஸ்டமர் கிரீமை கொடுத்துடு நானே பன்னுக்குள்ள வச்சு சாப்பிட்டுக்குறேன்னு சொல்றாரு. கடைய நடத்த முடியல மேடம்.

என் கடைக்கு வந்த உங்கள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசனிடம் ஜி.எஸ்.டி பற்றி கேட்டால், வட இந்தியர்கள் ஸ்வீட் வகைகளை அதிகம் சாப்பிடுவதால் ஸ்வீட்டுக்கு 5 சதவீதமும், காரத்துக்கு 12 சதவீதமும் ஜி.எஸ்.டி போடுவதாக கூறுகிறார். இப்படி செய்தால் என்ன ஆவது? தமிழ்நாட்டில் ஸ்வீட், காரம், காஃபி தான் அதிகம் விற்பனையாகிறது. தயவு செய்து அதை ஆலோசியுங்கள் மேடம். ஸ்வீட் கார வகை உணவுப் பண்டங்களுக்கு ஒரே மாதிரியான ஜி.எஸ்.டி வேண்டும். ஏனென்றால், ஒரு குடும்பம் வந்தால் கம்ப்யூட்டரே திணருது மேடம்” என நகைச்சுவையாக பேசினார். இவரது பேச்சுக்கு, அந்த அரங்கம் முழுவதும் சிரிப்பலை ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. பலரும் ஜி.எஸ்.டி மற்றும் நிதியமைச்சருக்கு எதிராக இந்த வீடியோவை வைரல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று தனிப்பட்ட முறையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த அன்னபூர்ணா சீனிவாசன், “தயவு செய்து மன்னிச்சிக்கோங்க; நான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் இல்லை” என்று வருத்தம் தெரிவித்தார். இந்த நிலையில் கரூர் நாடாளுமன்ற எம்.பி. ஜோதிமணி, “ கோவை அன்னபூர்ணா உணவகம் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற உணவகங்களில் ஒன்று. அதன் நிறுவனர் சீனிவாசன் ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், மிகவும் நியாயமான வேண்டுகோள் ஒன்றை முன்வைக்கிறார். அதையும்  தன்மையாக முன்வைக்கிறார். ஜி.எஸ்.டியால் நாடே பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த வீடியோ வைரலாகிறது.

வெற்றிகரமாக தொழில் நடத்தி பலருக்கு வேலை வாய்ப்பு அளிக்கின்ற ஒருவர் தனது அனுபவத்தின் மூலம், பகிர்ந்து கொள்கிற ஒரு கருத்தைச் செவிமடுத்து, அதைச் சரி செய்ய வேண்டியது ஒரு நிதியமைச்சரின் கடமை.   ஆனால் அதைச் செய்யாமல் அவரை மன்னிப்பு கேட்க வைத்து, அந்த வீடியோவை வெளியிடுவது ஆணவத்தின் உச்சம். அறுவறுப்பானதும் கூட.  அவர் என்ன பெரிய குற்றம் செய்துவிட்டார் மன்னிப்பு கேட்பதற்கு? உண்மையைப் பேசுவது ஒரு குற்றமா?

தமிழ்நாட்டில், கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கு நிகழ்ந்த இந்த அவமதிப்பிற்கு வருந்துகிறேன். பாஜக ,பாசிசம் என்ன செய்யும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சி. நீங்கள் பாஜகவிற்கு அள்ளிக்கொடுத்தாலும், அவர்களுக்கு அடிமையாகத்தான் இருக்கவேண்டும். அவர்கள் முன்னால் கை கட்டி வாய் பொத்தி நிற்கவேண்டும் என்று தான் எதிர்பார்ப்பார்கள். மற்றவர்களுக்குச் சொந்தக் கருத்தே இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களின் உறுதியான நிலைப்பாடு. அன்னபூர்ணா நிறுவனரை அவமதித்ததற்காக ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும். சீனிவாசனுக்கு எனது அன்பும், ஆதரவும்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்