கல்பனா சாவ்லாக்களும், சுனிதா வில்லியம்ஸூகளும் விண்வெளி பயணம் வரைச் சாதித்து விட்டாலும்கூட, நம்ம ஊர்களில் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிளை ஓட்டி வரும் பெண்களை வியப்பாகப் பார்க்கும் மனோபாவம் என்னவோ இன்னும் மாறவேயில்லை. இந்த பாகுபாடு என்பது என்பது ஆண்களிடம் மட்டுமே உள்ளதாகச் சொல்லிவிட இயலாது; ஒட்டுமொத்த இந்திய பொதுச்சமூகத்தின் பார்வையும் கூட, இது ஆணுலகம்; இது பெண்ணுலம் என்றே பிளவுபடுத்தி வைத்திருக்கிறது.
சில துறைகள் இன்னும் ஆண் மையச் சூழலில்தான் இருந்து வருகிறது. பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துநர் பணிகள் எல்லாம் காலம்காலமாக ஆணுலகம் சார்ந்தது என்ற கருத்தாக்கம் இருந்து வருகிறது. இந்த மரபை, தடாலடியாக உடைத்துப் போட்டிருக்கிறார், இளையராணி என்னும் 34 வயது குடும்பத் தலைவி.
ஆமாம். ராசிபுரம் & சேலம் (எண்.: 52) வழித்தடத்தில் செல்லும் அரசு நகரப் பேருந்தில் நடத்துநராக நியமிக்கப்பட்டு இருக்கிறார் இளையராணி. சேலம் கோட்டத்தில், அரசுப் பேருந்தில் நியமிக்கப்பட்ட முதல் பெண் நடத்துநர் என்ற பெருமை இவருக்கு உண்டு. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள பழனியப்பன் புதூரைச் சேர்ந்தவர்.
இவருடைய தந்தை முனியப்பன், ராசிபுரம் பணிமனையில் டிக்கெட் பரிசோதகராகப் பணியாற்றி வந்தார். பணிக்காலத்திலேயே அவர் இறந்து விட்டதால், வாரிசு அடிப்படையில் இளையராணிக்கு நடத்துநர் பணி வழங்கி இருக்கிறது தமிழக அரசு. இவருடைய கணவர், குமார். தனியார் கல்லூரியில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இது தொடர்பாக இளையராணி கூறுகையில், ''எங்கள் தந்தை முனியப்பன் கடந்த 2010- ஆம் ஆண்டு பணியில் இருக்கும்போதே இறந்து விட்டார். என் தம்பி இளையராஜா. அவர், படித்துக் கொண்டிருந்ததால், வாரிசு அடிப்படையில் வேலைவாய்ப்பு கேட்டு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் விண்ணப்பித்து இருந்தேன். என்னைப் போல 10 பேர் வாரிசு வேலை கேட்டு விண்ணப்பம் செய்திருந்தனர். எனக்கு நடத்துநர் பணி கிடைத்தது.
கடந்த ஒரு மாதமாக ராசிபுரம் பணிமனைக்கு உட்பட்ட ராசிபுரம் - சேலம் வழித்தட அரசுப் பேருந்தில் நடத்துநராக பணியாற்றி வருகிறேன். அதிகாலை 05.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை தொடர்ச்சியாகப் பேருந்துக்குள் அங்குமிங்கும் நடந்தபடி பயணச்சீட்டை வழங்குவது, பேருந்து நிறுத்தங்களில் பயணிகளுக்கு அழைப்பு விடுப்பது எனச் சுறுசுறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் போய்க் கொண்டிருக்கிறது.
இந்தப் பணிக்காக எனக்கு ஒரு மாதம் பயிற்சி கொடுத்தனர். ஆரம்பத்தில், பயணிகளிடம் காசை வாங்கிப்போட்டு, அதற்கு டிக்கெட் கிழித்துக் கொடுத்து, கணக்குவழக்கை எல்லாம் சரிபார்த்து, அதை அதிகாரிகளிடம் ஒப்படைப்பது எனக் கொஞ்சம் சவாலாகத்தான் தெரிந்தது. போகப்போக எல்லாமே எளிமையாகி விட்டது.
எந்த வேலையாக இருந்தாலும் ஆண், பெண் எனப் பேதம் பார்க்கத் தேவையில்லை. பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் அவர்களும் எல்லா துறைகளிலும் சாதிப்பார்கள்'' என்கிறார் இளையராணி.
'எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி' என முழங்கிய புரட்சிப்பாவலன் பாரதியின் கூற்றை மெய்ப்பித்திருக்கிறார் இளையராணி.