மேட்டூர் அணையை ஜூன் 12- ஆம் தேதி திறப்பது குறித்து தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர், காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர், பொதுப்பணித்துறை, வேளாண்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
ஆலோசனைகளுக்குப் பிறகு ஜூன் 12- ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "குறுவை சாகுபடிக்காக ஜூன் 12- ஆம் தேதி காலை 10.00 மணிக்கு மேட்டூர் அணையைத் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.01 அடியாகவும், நீர் இருப்பு 64.85 டி.எம்.சி.யாகவும் இருப்பதால் அணை திறக்கப்படுகிறது. மேட்டூர் அணை திறப்பால் நடப்பாண்டில் 3.25 லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக குறுவை சாகுபடிக்கு வாய்ப்புள்ளது. 3.25 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடந்தால் சுமார் 5.50 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் எதிர்பார்க்கப்படுகிறது.
குறுவை சாகுபடிக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வட்டியில்லாத கடன் தரப்படும். மேட்டூர் அணையில் தற்போதுள்ள நீர் 50 நாட்கள் பாசனத்திற்குத் திறந்து விட போதுமானது. டெல்டா பகுதிகளில் 12 மணி நேரத் தடையில்லா மும்முனை மின்சாரம் கிடைக்க மின்சாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பாசன வாய்க்கால்களை விரைவாக தூர்வாரவும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு. கிணற்று நீர் வசதியுள்ள விவசாயிகள் ஜூன் 12- ஆம் தேதிக்குள் நாற்று விட்டு, நடவுப்பணியை முடிக்க வேண்டும். நெல் விதைகள், உரங்கள், வேளாண் இயந்திரங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது". இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 ஆண்டுகளுக்குப் பிறகு திட்டமிட்டப்படி ஜூன் 12- ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுகிறது. மேலும் ஜூன் 12- ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவதால் இந்த முறை முப்போகம் சாகுபடி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.