மருத்துவப் படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கோர உரிமை உள்ளது என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி திமுக உள்ளிட்ட கட்சிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்
இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் 27% இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மருத்துவப் படிப்புகளில் அந்தந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்ற அனுமதிக்கலாம். ஆனால், அந்த இடஒதுக்கீடு, மொத்த இடங்களில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இன்று இந்த வழக்குகளில் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, வழங்கியிருக்கும் தீர்ப்பில் -
மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறைகள் அனைத்தும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாணவர்களின் குறைந்தபட்ச தகுதியை மத்திய அரசும், எம்.சி.ஐ.-யும் தீர்மானிக்க வேண்டும்.
இட ஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும் என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் வாதத்தை ஏற்க முடியாது. மருத்துவ கவுன்சில் விதிகளில் மாநில இடஒதுக்கீடு பின்பற்றக் கூடாது என எந்த விதிகளும் இல்லை.
மருத்துவப் படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்றலாம். மத்திய கல்வி நிலையங்கள் அல்லாத நிலையங்களிலும் ஒ.பி.சி. இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரீதியாகவோ, அரசியலமைப்பு ரீதியாகவோ, எவ்விதத் தடையும் இல்லை.
மேலும், மத்திய - மாநில அரசுகளின் சுகாதாரத்துறை அதிகாரிகள், இந்திய மருத்துவ கவுன்சிலோடு கலந்தாலோசித்து, இடஒதுக்கீடு வழங்குவது பற்றிய நடைமுறைகள் குறித்து முடிவெடுக்க வேண்டும். மூன்று மாதங்களில் அதை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தத் தீர்ப்பைப் பல்வேறு அரசியல் கட்சிகளும் வரவேற்று வரும் நிலையில் தமிழக பா.ஜ.க.வும் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளது. மத்திய அரசு தாக்கல் செய்த மனுவின் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள பா.ஜ.க. தலைவர் எல்.முருகன். பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தின் உயர்வுக்காக தொடர்ந்து பா.ஜ.க. பாடுபடும். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சொல்லும் பொய்களை மக்கள் ஏற்கமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.