Skip to main content

வன்முறை காட்சிகளுக்கு எச்சரிக்கை வாசகம் வேண்டும் எனக் கோரி மனு-எச்சரித்து தள்ளுபடி செய்த நீதிபதிகள்

Published on 08/06/2022 | Edited on 08/06/2022

 

highcourt chennai

 

திரைப்படங்களில் வன்முறை காட்சிகள் வரும்போது அதில் வரும் ஆயுதங்கள், இரத்தம் போன்றவை போலியானவை என்பதை அறிவுறுத்த எச்சரிக்கை வாசகங்கள் வைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

 

சினிமா சண்டைக் காட்சிகளில் இடம்பெறும் ஆயுதங்கள், இரத்தம் போன்றவை போலியானவையே. இருப்பினும் அவை பார்வையாளருக்குத் தத்ரூபமாக உண்மைபோலவே காட்டப்படுகிறது. இந்த நிலையில் அதிகம் ஆக்சன் நிறைந்த திரைப்படங்களில் வரும் சண்டை காட்சிகள், அதில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள், ரத்தங்கள் உள்ளிட்டவற்றை காணும் இளைஞர்கள் அதேபோன்ற வன்முறை செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது என்றும், எனவே வன்முறை காட்சிகளின் பொழுது காட்டப்படும் ஆயுதங்கள் பேப்பரால் செய்த போலி எனவும், இரத்தங்கள் காட்டப்படும் பொழுது அவை ரத்தமல்ல கலர் பவுடர் எனவும் எச்சரிக்கை வாசகம் வைக்க உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கோபிகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கறிஞர்கள் பொதுநல வழக்கு தொடரக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்போவதாக எச்சரித்தனர். வழக்கை திரும்பப் பெறுவதாக மனுதாரர் கோரிக்கை வைத்த நிலையில் இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 


   

சார்ந்த செய்திகள்