பெண்கள் ஆண்களுக்கு நிகர் என்று எல்லா வேலைகளில் போட்டி போட்டுக்கொண்டு முன்னேறி வந்து கொண்டு இருக்கும் இதே நேரத்தில்தான் தனியாக பயணம் செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சம்பவங்களும், சபல ஆசாமிகளின் தொந்தரவும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அண்மையில் தெலுங்கனாவில் நிகழ்ந்த சம்பவத்தை கூட நாம் மறந்திருக்க மாட்டோம். பல நேரங்களில் பெண்கள் இதை வெளியே சொல்ல முடியாமல் பல விபரீத முடிவுகளை எடுக்கிறார்கள். ஆனால் திருச்சியில் தனியே செல்லும் பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசாமிகள் மீது புகார் கொடுத்து கைதான சம்பவம் அடுத்தடுத்து நடந்துள்ளது.
சென்னையில் இருந்து இரவு மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சிக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. ரயிலில் 1500க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பி 4 பெட்டியில் சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சுமதி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது.) பயணம் செய்தார். இவர் தஞ்சையில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். அதே கோச்சில் அவருக்கு அருகில் சிவகங்கையை சேர்ந்த முத்துகுமார் (வயது 40) என்பவரும் பயணம் செய்தார். இவர் சென்னையில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். விடுமுறையையொட்டி ஊரில் உள்ள மனைவியை பார்க்க வந்தார்.
அப்போது இரவில் முத்துகுமார் சுமதியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதை உடனே கண்டித்திருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த முத்துகுமார் சுமதியை தவறாக பேசி திட்டியுள்ளார்.
அதிகாலை 4.30 மணிக்கு ரெயில் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திற்கு வந்ததும் சுமதி திருச்சி ரயில் நிலைய போலீசாரிடம் புகார் கூறினார். சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து முத்துகுமாரை கைது செய்தார். அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டது. கைதான முத்துகுமார் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 31-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதேபோல் சிவகங்கையை சேர்ந்த ருக்மணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கு 18 வயது மகனும், 17 வயதில் மகளும் உள்ளனர். ருக்மணிக்கு மதுரை குலமங்கலத்தை சேர்ந்த லாரி டிரைவர் கண்ணன் (40) என்பவருடன் பழக்கம் இருந்துள்ளது.
திருச்சியில் உள்ள கல்லூரியில் படிக்கும் மகன், மகளை பார்க்க செல்லும்போது கண்ணனின் லாரியில் ருக்மணி அடிக்கடி செல்வார். இதில் ஏற்பட்ட பழக்கம் நெருக்கமானது.
இந்தநிலையில் கண்ணனின் லாரியில் ருக்மணியும் அவரது மகளும் திருச்சிக்கு புறப்பட்டனர். வழியில் திருச்சி வந்ததும் ருக்மணி மகனை பார்க்க செல்வதற்காக லாரியில் இருந்து இறங்கி விட்டார். தனது மகளை மணப்பாறையில் உள்ள கல்லூரி அருகே இறக்கி விடும்படி அவரை நம்பி அனுப்பியுள்ளார்.
இந்தநிலையில் லாரி வையம்பட்டி அருகே சென்றபோது கண்ணன் திடீரென மாணவியிடம் அத்துமீறியுள்ளான். ஓடும் லாரியில் மாணவி கண்ணனிடம் இருந்து தப்ப முடியாமல் தவித்துள்ளார்.
வழியில் வையம்பட்டியில் லாரியை நிறுத்திய கண்ணன் மாணவியிடம் அத்துமீறியுள்ளான். இதனால் பயந்து போன மாணவி அவரிடமிருந்து தப்பி அருகில் இருந்த கிராமத்தில் அடைக்கலம் புகுந்தார். அங்கிருந்த பொதுமக்களிடம் நடந்ததை கூறி அழுதார்.
அப்போது அங்கு வந்த கண்ணனை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். இதுகுறித்து மணப்பாறை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவம் குறித்து மாணவியின் தாய் ருக்மணி மணப்பாறை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் கண்ணன் மீது போக்சோ சட்டம், தலித் வன்கொடுமை தடுப்பு சட்டம், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். கண்ணன் சிறையில் அடைக்கப்பட்டார். திருச்சியில் நடந்த இந்த 2 சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.