காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி எம்.பி., இன்று (16/12/2021) டெல்லியில் மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் வழங்கினார்.
இது குறித்து ஜோதிமணி எம்.பி. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இன்று நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து, மணப்பாறை, விராலிமலை தொகுதிகளில் விபத்து நடக்கும் இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
நான் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனதும் வைத்த கோரிக்கையை ஏற்று, கரூர் மாவட்டம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக விபத்து நடக்கும் இடங்களில், ஏழு இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க நிதி ஓதுக்கீடு செய்ததற்கு கரூர் நாடாளுமன்ற தொகுதி மக்கள் சார்பாக நன்றி தெரிவித்தேன்.
மேம்பாலம் இல்லாததால், இந்த இடங்களில் (Block spots) நூற்றுக்கணக்கானவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்த பிரச்சினை கரூர் நாடாளுமன்ற தொகுதியில் நீண்ட காலமாக யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, மக்களை பாதுகாக்க முடிந்ததில் மகிழ்ச்சி" எனத் தெரிவித்துள்ளார்.