Skip to main content

‘முற்போக்கு அமைப்புகள் வழக்கில் இணையுங்கள்..’ - அனைத்து சாதியினர் அர்ச்சகர் மாணவர்கள் சங்கம் கோரிக்கை

Published on 15/02/2022 | Edited on 15/02/2022

 

‘Join the Progressive Organizations Case ..’ - All Caste Priestly Students Association Request

 

அனைத்து சாதியினர் அர்ச்சகர் சங்கம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளாய் இருந்த கருவறைத் தீண்டாமையை, அகற்றும் விதமாக, கடந்த ஆகஸ்ட் 14, 2021 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து சாதி அர்ச்சகர் நியமனங்களை வழங்கினார். தமிழக அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் படித்த 22 அர்ச்சக மாணவர்கள் உட்பட 57 மாணவர்களுக்கு முறையான நேர்காணல் மூலம் பணிநியமனம் வழங்கப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் பணியாற்றி வருகின்றனர்.


பரம்பரை வழி அர்ச்சகர்கள் பல நெருக்கடிகள் கொடுத்தாலும் விடாப்பிடியாக இறைவனுக்கான பணியில் அரசு அர்ச்சகர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒட்டு மொத்த தமிழ்நாடும் தி.மு.க அரசின் இந்நடவடிக்கையை வரவேற்றபோதும், சிவாச்சார்யார்கள், பட்டாச்சாரியார்கள் என அரசு பொதுக் கோயில்களில் வாரிசு முறையில் பணியாற்றி வந்த சிலரும், வைதீக இந்துத்துவ மத அடிப்படைவாத அமைப்பினரும் மட்டுமே அர்ச்சகர் நியமனத்தை எதிர்த்தனர். தற்போது, சட்டத்தின் சந்து, பொந்துகளில் நுழைந்து அர்ச்சகர் நியமனத்தை எதிர்க்க முனைந்துள்ளனர்.     

 

உச்சநீதிமன்றத்தில் அர்ச்சகர் வழக்கை நடத்தி, கடந்தகால சட்டச் சிக்கல்களை எதிர்கொண்டவர்கள் என்ற முறையில் தமிழக மக்களுக்கும், கட்சிகளுக்கும் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்குகள் தொடர்பான விபரங்களைத் தெரிவிக்கிறோம்.

 

சென்னை உயர்நீதிமன்றத்தில்,

(i) அனைத்து சாதி அர்ச்சகர் பணி நியமனத்தை (CHALLENGING THE ADVT.DATED:06.07.2021) எதிர்த்து 5 வழக்குகளும்,

(ii) அர்ச்சகர் மற்றும் கோயில் ஊழியர்களுக்கான, தமிழ்நாடு இந்து சமய நிறுவனப் பணியாளர்கள் பணிவரன்முறை விதிகள்,2020 (CHALLENGING G.O.Ms.No.114 – TAMIL NADU RELEGIOUS INSTITUTIONS EMPLOYEES (CONDITIONS OF SERVICE) RULES,2020- மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளை   எதிர்த்து 10 வழக்குகளும்,

(iii) அரசு அர்ச்சகப் பள்ளிகளை எதிர்த்து 2 வழக்குகளும் என மொத்தம் 17 வழக்குகள் பல்வேறு நபர்களால் தொடரப்பட்டுள்ளன. எதிர்வரும் பிப்ரவரி.16, 2022 அன்று மேற்படி 17 வழக்குகளும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளன.

 

மேற்படி வழக்குகளில்  ஆதி சைவ சிவாச்சார்யார்கள் சேவா சங்கம், தென்னிந்திய வைகாசன அர்ச்சகர்கள் சங்கம், கோயில் வழிபாட்டாளர் சங்கம் உள்ளிட்ட பலர் முன்வைக்கும் வாதங்கள்: ஆதி சைவ சிவாச்சாரியார்கள் என்ற தனி மத உட்பிரிவினர் 25000 குடும்பங்கள் தமிழகத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் மட்டுமே  சைவக் கோயில்களில் பூஜை செய்யும் உரிமை படைத்தவர்கள்; ஆகமப்படி மற்ற சாதி இந்துக்கள் சாமி சிலையைத் தொட்டால் தீட்டாகிவிடும் என சேசம்மாள் வழக்கின் தீர்ப்பு உள்ளது. ஆகமக் கோயில்களில் அர்ச்சகர் நியமனம் குறித்து விதி உருவாக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை. அரசின் விதிகளில் கடவுளின் மொழியான சமஸ்கிருதம் படிப்பது, எழுதுவது தொடர்பான ஆற்றல் குறித்த விதிகள் ஏதும் இல்லை. அர்ச்சக மாணவர்களுக்கான பாடத்திட்டம் வகுக்கும் உரிமை அரசுக்கு இல்லை. அர்ச்சகர்கள் மற்றும் ஓதுவார்களுக்கான பணி வயது, சம்பளம், ஓய்வு பெறும் வயதை அரசு நிர்ணயம் செய்ய முடியாது. மரபு, பழக்க, வழக்கம், ஆகமங்களின்படி எல்லோரும் அர்ச்சகர் ஆக முடியாது. தமிழக முதல்வர் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் என்று சொல்லி நாத்திகரான பெரியாரின் பெயரில் நியமனம் செய்துள்ளார். இது உள்நோக்கமுடையது. அர்ச்சகர் நியமனங்கள் சேசம்மாள், ஆதி சைவ சிவாச்சார்யார்கள் வழக்குகளின் தீர்ப்புகளுக்கு எதிரானது. தமிழகத்தின் ஒவ்வொரு கோயிலும் தனித்துவமானது. அரசு பொதுவான விதியை இயற்ற முடியாது. கோயில்களுக்கு அரசு நிர்வாக அதிகாரிகள் நியமிப்பதே அரசியல் சட்டத்திற்கு முரணானது. தமிழக அரசின் நடவடிக்கை அரசியல் சட்டத்தின் பிரிவுகள் 19, 25, 29-க்கு எதிரானது. எனவே, அர்ச்சகர் நியமனம், விதிகளை ரத்து செய்து, பயிற்சிப் பள்ளிகளை மூட வேண்டும் எனக் கோரியுள்ளனர்.  

 

பிறப்பால் “பிராமணர்கள்தான் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும்” என்று ஆகம நூல்கள் எதிலும் கூறப்படவில்லை. ஆனால், ஆகம விதி என்று சொல்லும் இடங்களிலெல்லாம் மரபு – பழக்க வழக்கம் என்ற சொற்றொடர்களையும் சேர்த்துத்தான் எப்போதும் பயன்படுத்துகின்றனர். எப்படி வேண்டுமானாலும்  பொருள் கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகின்ற இந்தச் சொற்றொடர்களின் துணை கொண்டுதான் இன்றுவரை அர்ச்சகர் நியமனம்  எதிர்க்கப்படுகிறது.

 

2015 அர்ச்சகர் தீர்ப்பிற்குப்பின் சபரிமலை அய்யப்பன் கோயில் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பு மிகவும் முக்கியமானது. இத்தீர்ப்பில் “ இந்திய அரசியல் சட்டம் சமூக மாற்றம், சமூக சமத்துவத்திற்கான ஓர் ஆவணம்; அரசியல் சட்ட அடிப்படையிலான முன்னுரிமை என வரும்போது ஒரு தனி நபர், குழுவின் மத உரிமை – சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், தனி மனித கண்ணியம் உள்ளிட்டவைகளை முன்னிருத்தும் அரசியல் சட்ட அறங்களுக்குக்கு உட்பட்டே செயல்பட முடியும். பிறப்பு, உடற்கூறு வகைப்பட்ட பாகுபாடுகள் அரசியல் சட்டத்திற்கு எதிரானது. தனி மனித கண்ணியத்தை, மற்ற குடிமக்களை கீழானதாகக் கருதும் எதையும் ஏற்க முடியாது. பிரிவு 26-ன் கீழான மத உட்பிரிவுகளின் உரிமை, பிரிவு 25 (2) (ஆ)-வுக்கு உட்பட்டே இயங்கும்.தனி நபரின் சுதந்திரம், கண்ணியம், சமத்துவத்தை மீறி எந்த மதக் கோட்பாடு, பழக்க வழக்கம், மரபுகள், நம்பிக்கைகள் இருக்க முடியாது. அவ்வாறு இருந்தால் அவை அரசியல் சட்டப் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அரசியல் சட்டத்திற்கு அர்த்தம் உள்ளதென்றால் மதம், தனி மனித நம்பிக்கையாகவோ, மதக் கோட்பாடாகவோ யாரையும் இழிவு படுத்த முடியாது” மிகவும் ஆணித் தரமாகக் குறிப்பிடப்படுகிறது.

 

அர்ச்சகர் தீர்ப்பு இரண்டு நீதிபதிகள் வழங்கியது. சபரிமலை தீர்ப்பு 5 நீதிபதிகள் வழங்கியது. எனவே சபரிமலைத் தீர்ப்பின் ஒளியிலேயே, அர்ச்சகர் தீர்ப்பு பொருள் விளக்கம் கொள்ளப்பட வேண்டும். மேலும் சேசம்மாள் வழக்கு முதல்  2015 மதுரை ஆதி சைவ சிவாச்சாரியார்கள் வழக்கு வரை கூறப்பட்ட தீர்ப்புகளில் “அர்ச்சகர் நியமனம் என்பது அரசின் மதச் சார்பற்ற நடவடிக்கை“ என்று மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

தமிழக அரசும், மற்ற அரசு ஊழியர்களுக்கு இருப்பதுபோல், அர்ச்சகர் மற்றும் கோயில் ஊழியர்களுக்கான, தமிழ்நாடு இந்து சமய நிறுவனப் பணியாளர்கள் பணிவரன்முறை விதிகள் 2020-ஐ உருவாக்கியுள்ளது. ஆனால், அரசின் எந்தச் சட்டம், விதிகளின் கீழும் தாங்கள் வரமாட்டோம் என சிவாச்சார்யார்களும், பட்டாச்சாரியார்களும் சொல்கிறார்கள். அரசுப் பொதுக் கோயில்களில் பணிபுரியும் இவர்கள் இப்படிச் சொல்ல முடியுமா? இவர்களைப் போல், அரசின் வேறுதுறைப் பணியாளர்கள் சட்டம், விதிகளுக்கு கட்டுப்பட மறுத்தால் என்னவாகும்? சிவாச்சார்யார்களும், பட்டாச்சாரியார்களும் அரசியல் சட்டத்திற்கு மேற்பட்டவர்களா? எனவே, அரசியல் சட்டப்படியான சமத்துவத்தை மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுக்கோயில்களில் நிலைநாட்டும் திராவிட முன்னேற்றக் கழக அரசின் வரலாற்றுச் சிறப்பு மிக்க முயற்சியை, தடுப்பதற்கான பணிகள் சட்ட வடிவில் திட்டமிட்டு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றும் ஆர்.எஸ்.எஸ். சிந்தனை கொண்ட சிலரும் துணைபோகிறார்கள். பல மத அடிப்படைவாத அமைப்பினரும் பின்னணியில் உள்ளனர்.

 

சமத்துவத்திற்கு விரோதமான இம்முயற்சியை தமிழக மக்கள் அனுமதிக்கக் கூடாது. அர்ச்சக மாணவர் சங்கம் சார்பில் வழக்குகளில் நாங்கள் இணைந்துள்ளோம். இதே போல், தி.மு.க, அ.தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், தி.க மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள், முற்போக்கு அமைப்புகள், இயக்கங்கள், ஆதீன மடங்கள் உள்ளிட்ட பலரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளில் இணைய வேண்டும். தமிழக அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் மிக அனுபவம் வாய்ந்த மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு வழக்குகளை நடத்த வேண்டும் என்று கோருகிறோம்’ என அர்ச்சக மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் அரங்கநாதன் வேண்டுக்கோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்