Published on 29/04/2020 | Edited on 29/04/2020
சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் பேசிய நடிகை ஜோதிகா, தான் புதியதாக நடித்துவரும் திரைப்படம் குறித்து பேசுகையில், தஞ்சை பெரிய கோயில் குறித்தும் பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த கருத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அறிக்கை மூலம் ஆதரவு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில்,
அரசு மருத்துவமனைகளும், பள்ளிக்கூடங்களும் மிகவும் முக்கியம். பல்வேறு அரசு மருத்துவமனைகளில், பள்ளிகள், கல்லூரிகளில் இன்னும் அடிப்படை வசதிகளே நிறைவடையவில்லை என்பதை என் அனுபவத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். எனது நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் 90 விழுக்காட்டை அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிக்கே ஒதுக்கியிருக்கிறேன். இருந்தும் அடிப்படை வசதிகள் நிறைவடையவே இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.
கரோனா தொற்று ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான சூழலில், அரசு மருத்துவனைகளே உயிர் காக்கும் காவலனாக களத்தில் நிற்கின்றன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆகவே, ஜோதிகா சொன்னது சரிதான். வெறும் பேச்சோடில்லாமல் சூர்யா- ஜோதிகாவின் குடும்பம் சமூக அக்கறையோடு கல்வி சேவையில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் உயர்கல்விக் கனவை அகரம் பவுண்டேசன் எவ்வித விளம்பரமும் இல்லாமல் செய்து வருகிறது.
இந்த நேரத்தில் மோடி கோவில்களை விட கழிவறைகள் முக்கியம் என்று சொன்னார் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். ஏன் அன்று யாரும் மோடி மீது பாயவில்லை? சமூக அக்கறைமிக்க ஜோதிகாவின் கருத்துக்காக ,பிஜேபி /ஆர்எஸ்எஸ் கும்பல் ஒரு பெண், நடிகை என்ற பார்வையில் அறுவெறுக்கத்தக்க வகையில், ஆபாசமாக விமர்சிக்கின்றனர்.
மாற்றுக் கருத்து இருந்தால் கண்ணியமாக வெளிப்படுத்தலாம். எதற்கிந்த ஆபாசமான, அறுவெறுப்பான விமர்சனங்கள்? இது அவர்களின் தரத்தைத்தான் காட்டுகிறதே தவிர ஜோதிகாவுக்கு ஒன்றும் இழுக்கில்லை.ஜோதிகாவிற்கு ஆதரவாக உறுதியோடு நிற்கும் சூர்யாவை மனமார பாராட்டுகிறேன்.
மேலும் காஷ்மீரில் 8 வயது சிறுமியை கோவிலில் வைத்து, பல நாள் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்தவர்களுக்கு ஆதரவாக, தேசியகொடியை ஏந்தி ஊர்வலம்போன (அதுவும் பிஜேபியின் அமைச்சர் தலைமையில்) பிஜேபி/ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு கோவிலை பற்றியோ, ஜோதிகா மற்றும் அவரின் குடும்பத்தை பற்றியோ பேச எவ்வித அருகதையும் கிடையாது.
உங்கள் ஆபாசத்தையும், அறுவெறுப்பான நடத்தைகளையும் அறிவும், கண்ணியமும், நாகரிகமும் நிறைந்த தமிழ் சமூகம் ஒருபோதும் ஏற்காது. ஜோதிகாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், அவர்களது அர்ப்பணிப்பு மிகுந்த சேவைகளுக்கும் மனமார்ந்த பாராட்டுகள் எனக் கூறியுள்ளார்.