கரோனா காலமாக இருப்பதால் வேலை, வருமானம் இல்லாமல் இருப்பதால் பொதுமக்கள் தங்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும், வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும், வீட்டில் ஆட்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கதவுகளை பாதுகாப்பாக பூட்டியிருக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும் சென்னை திருவல்லிக்கேணி, அண்ணாசாலை போலீஸ் நிலையங்களின் எல்லை பகுதியில் அடிக்கடி பூட்டிய வீடுகளில் நகை மற்றும் பொருட்கள் திருட்டு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. திருட்டு சம்பவங்கள் குறித்து இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்யலாம் என போலீசார் முடிவு செய்தனர். அதன்படி ஆய்வு செய்தனர். கேமராவில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
கேமராவில் வந்த அடையாளத்தை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த அந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். பின்னர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அந்த நபர் மேகநாதன். 34 வயதாகும் அவர் சென்னை திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர். பூட்டிய வீடுகளில் நகை, பொருட்களை திருடி அதனை விற்றது தெரிய வந்தது. அந்த பணத்தில் அவர் தனது காதலிக்கு ஜிமிக்கி வாங்கி கொடுத்திருப்பதாக போலீசாரின் விசாரணையில் தெரிவித்திருக்கிறார். அந்த காதலி யார் என்று போலீசார் கேட்டு தெரிந்து, அவருடைய காதலியிடம் சென்று, நடந்த விவரங்களைச் சொல்லி, உங்கள் காதலன் திருடிய நகை, பொருட்களை விற்றுத்தான் இதனை வாங்கி தந்துள்ளார் என்று கூறி, அவரிடம் இருந்த நகைகளை பறிமுதல் செய்தனர்.