திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகரக் காவல்நிலைய அதிகாரிகள் திருடன் ஒருவனைப் பிடித்துள்ளனர். அவனிடம் விசாரித்தபோது தான் திருடிய நகைகளின் ஒரு பகுதியை ஆம்பூர் நகரத்தில் உள்ள பிரபல தனியார் நகைக்கடையில் விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து நகைகளைப் பறிமுதல் செய்யச் செப்டம்பர் 16ஆம் தேதி ஆம்பூர் ஷாராப் பஜார் பகுதியில் திருட்டு நகை வாங்கியதாகச் சொல்லப்படும் அந்த நகைக் கடையின் உரிமையாளரை அழைத்து காவல்துறையினர் விசாரித்துள்ளனர்.
அப்போது, நான் வாங்கவில்லை என அந்த நகைக்கடை உரிமையாளர் சொல்ல, அவரை காவல்துறை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி நகை மற்றும் அடகுக்கடை உரிமையாளர்கள் 100 பேர் தங்களது கடைகளை அடைத்து போராட்டம் செய்தனர். அதோடு ஆம்பூர் நகரக் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
முறைப்படிதான் விசாரிக்கிறோம் இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என காவல்துறையினர் கூறியபோது நகைக்கடை உரிமையாளர்கள் கேட்கவில்லை. இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நீண்ட வாக்குவாதத்துக்குப் பின் நகைக் கடையினர் கலைந்து சென்றனர்.