திருச்சி லலிதா ஜீவல்லரியின் பின்பக்க சுவரை துளைபோட்டு கடந்த அக்டோபர் 2ம் தேதி ரூபாய் 13 கோடி மதிப்பிலான 29 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நகை கொள்ளை தொடர்பாக, திருவாரூர் மடப்புரம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த மணிகண்டன், கனகவள்ளி, மதுரையை சேர்ந்த கணேசன் ஆகியோரை கோட்டை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முக்கிய குற்றவாளியான கனகவள்ளியின் மகன் சுரேஷ் அக்டோபர் 10ம் தேதி செங்கம் நீதிமன்றத்திலும், 11ம் தேதி கொள்ளையன் கும்பல் தலைவன் முருகன் பெங்களுரில் 11வது குற்றவியில் நடுவர் நீதிமன்றத்திலும் சரண் அடைந்தனர். இதில் நவம்பர் 28ம் தேதி திருச்சி நீதிமன்றம் முருகனுக்கு 7 நாள் கஸ்டடி கொடுத்தது. இதில் பல திடுக்கிடும் தகவல்களை போலிசிடம் முருகன் வாக்குமூலமாக கொடுத்தார். அதில் சமயபுரம் நெம்பர் 1 டோல்கேட்டில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி பின்பக்கம் சுவரை துளைத்து கேஸ் கட்டர் மூலம் லாக்கரை உடைத்து 19 இலட்சம் பணம், 470 கிராம் நகை ஆகியவை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார்.
இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முருகன் கூட்டாளி கணேசன், இவரது உறவினர் ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதன் பிறகு முருகன் பெங்களுர் போலிசாரிடம் ஓப்படைக்கப்பட்டு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் முருகனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அதற்கு தேவையான மருத்துவம் முழுவதும் சிறையிலே வழங்கப்பட்டது. ஆனாலும் முருகனின் உடல்நிலை மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. கை, கால்கள் செயல் இழந்து போய் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அவர்கள் முழுமையான சிகிச்சை பெறுவதற்கு கடந்த வாரம் லலிதா ஜீவல்லரி கொள்ளை வழக்கில் ஜாமீன் கிடைத்த நிலையில், வங்கி கொள்ளை வழக்கில் ஸ்ரீரங்கம் நீதிமன்றத்தில் முருகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இன்னும் முருகன் மீது பாலக்கரை சிலிண்டர் திருட்டு வழக்கு மட்டும் பாக்கி உள்ளது. இதிலும் ஜாமீன் வாங்கிவிட்டால் வெளியே வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் முருகன் தரப்பு வழக்கறிஞர்கள்.
எப்படி அடுத்தடுத்த திருட்டு வழக்குகளில் முருகனுக்கு ஜாமீன் எப்படி கிடைக்கிறது என்று போலிஸ் தரப்பில் விசாரித்தபோது, முருகன் வழக்குகளில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதால் உயர்நீதிமன்ற உத்தரவின் படி முருகனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது என்கிறார்கள்.