Skip to main content

நெல்லையை உலுக்கிய நகை கொள்ளை; நகைக்கடை அதிபர் மீது கொடூர தாக்குதல்

Published on 14/04/2022 | Edited on 14/04/2022

 

Jewelry flushing incident Nellai

 

நெல்லை மாவட்டத்தின் வீரவநல்லூரில் அலி ஜூவல்லர்ஸ் எனும் நகைக்கடை வைத்திருப்பவர்கள் மைதீன் பிச்சை(55)யும் அவரது சகோதரர் அலியாரும். இருவரும் 20 ஆண்டுகளாக மெயின் பஜாரில் நகைக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு சுமார் 8.30 மணியளவில் நகைக்கடையை வழக்கம்போல் பூட்டிவிட்டு மைதீன் பிச்சை நகைப்பையுடன் தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு போய்க்கொண்டிருந்தார். அப்போது மைதீன் பிச்சையை  வேவு பார்த்த கும்பல் ஒன்று டூவீலரில் அவரை பின்தொடர்ந்து சென்று திடீரென அரிவாளால் வெட்டியது. இதனால் மைதீன் பிச்சை நிலைகுலைந்து சரிந்தார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் அவர் வைத்திருந்த நகைப் பையைப் பறித்துச் சென்றுள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்  படுகாயத்துடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மைதீன் பிச்சையை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இதன் பின்னர்  மைதீன் பிச்சையிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நகைப் பையில் 5 கிலோ தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.75 ஆயிரம்  இருந்ததாகத் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து அலர்ட் ஆன போலீசார் மாவட்டம் முழுக்க உள்ள சோதனை சாவடிகளை உஷார் படுத்தியதுடன் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.  கொள்ளை போனது 5 கிலோ தங்க நகைகள் என்பதால் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் எஸ்.பி. சரவணன், ஏ.டி.எஸ்.பி. மாரிராஜன் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். கடை மற்றும் பிற பகுதிகளில் சோதனை செய்த போலீசார் அங்கிருந்த சி.சி.டிவி ஆய்வு செய்தனர். அதில்  கொள்ளையர்களில் ஒருவன் டூவீலரில் மைதீன் பிச்சையை பின்தொடர்ந்து வந்ததும் மற்ற மூன்று பேர் மைதீன் பிச்சையைத் தாக்கி நகைப் பையைப் பறிக்கப் பதுங்கியிருந்ததும் தெரியவந்தது. இதனடிப்படையில் எஸ்.பி. சரவணன்  கொள்ளைக் கும்பலைப் பிடிப்பதற்காக 6 தனிப்படைகளை அமைத்துள்ளார்.

 

திருடுபோன 5 கிலோ தங்க நகைகளின் மதிப்பு 2.51 கோடி என்கிறார்கள். தினமும் நகைக்கடையை பூட்டிவிட்டு நகை பையுடன் வீட்டிற்கு திரும்பும் மைதீன் பிச்சையை வேவு பார்த்து திட்டமிட்டு இச்சம்பவம் நடந்திருப்பதாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், அண்மையில் அவரது கடைக்கு வந்து போனவர்களின் விவரங்களையும் சேகரித்து வருகின்றனர். இந்தக் கொள்ளைச் சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்